FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Monday, May 15, 2017

என்ன படிக்கலாம்?:- குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் கல்வி

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு...
மேல்நிலை +2 தேர்வு முடிவுகள் வெளிவந்ததும், அடுத்தது பட்டப் படிப்பு என்று வரும்போதே என்ன படிப்பது என்று மாணவ மாணவியரும், என்ன படிக்கவைகலாம் என்று பெற்றவர்களும் சிந்தனை செய்யத் தொடங்கி விடுகின்றனர். தற்போதைய நிலையில் படிப்பு என்றாலே மிகப்பெரிய தொகையை செலவு செய்யவேண்டி கட்டாயம் உள்ளது. கடன் பெற்று செய்த கல்வி செலவுகள் எத்தனை விரைவாக கடனையும் அடைத்து குடும்பத்திற்கும் உபயோகமாக சம்பாதிக்கமுடியும் என்பதில் எவருக்கும் ஒரு தீர்கமான முடிவோ சிந்தனை இல்லை என்பதுதான் உண்மை.

இப்படிப்பட்ட சூழலில்தான்..தற்போதைய கல்விக் கண்காட்சியிலும, மற்றும் பல நிறுவனங்களின் [Campus interview] கல்லூரியில் நேர்காணலின்போதும் அனைத்து மாணவர்களுக்கும் இதை எதிர்கொள்வது எப்படி என்பதை கூறிவருகிறேன்.

குறைந்த செலவில் மிக விரைவிலும் எளிதாகவும் வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் கல்வியாக கீழ்வரும் பாடப்பிரிவுகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

1. வணிகவியல் (Commerce) இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது-மேற்கொண்டு வேலையில் சம்பாதித்துக்கொண்டே படித்துக்கொள்ளலாம் B.Com, BBA, FICA, BCS(Corporate Secretary)... போன்றவை....

2.மருத்துவ செவிலியர் (Nursing) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் மூன்று ஆண்டுகள் கல்லூரி பட்டப் படிப்பையும் முடித்தாலே போதுமானது அல்லது பட்டயப்படிப்பை(Diploma) படித்தாலும் போதும்) சிறப்பான வேலைவாய்ப்பு காத்துக்கொண்டிருக்கிறது.

3. கணினிக்கல்வி (Computer Diploma in ITES & Softwares) BCS, BSc-CS B.Tech-IT போன்ற பல்வேறு விதமான கணினி சார்ந்த பட்டய மற்றும் உயர் பட்டப் படிப்புகள் ) பெரிய நிறுவனங்களில் சுலபமாக ITபணியில் சேரலாம் அல்லது சுயமாக சம்பாதிக்கவும் கணினி கல்வி பெரிதும் பயனுள்ளதாக இருக்கும்.

4.ஆசிரியர் பயிற்சி. (Teachers-Training) இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும்  2 ஆண்டுகள் அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியிலும் படித்தவர்களுக்கும் வேலைவாய்ப்பு நிறைந்திருக்கும் கல்வியாக கருதப்படுகிறது.

5. சட்டக்கல்வி (Law) (இரண்டு ஆண்டு மேல்நிலைப்பள்ளியிலும் 5 ஆண்டு பட்டப் படிப்புடன் கூடிய சட்டக் கல்வி BA-LLB, BBA-LLB, B.Com-LLB அல்லது ஒரு சிறு சட்டம் சார்ந்த பட்டயப்படிப்பை(Diploma in Law) படித்தாலும் போதும், தனியார் பணியிடங்களில் அதிக வேலைவாய்ப்புகள் நிறைந்திருக்கும் கல்வி இது)

6. பொறியியல் பட்டய (Diploma டிப்ளமோ) மற்றும் (Graduate degree courses) பட்டப்படிப்பு:- எந்தவித நுழைவுத்தேர்வும் எழுதாமல் 10ம் வகுப்பிற்குப் பிறகு 6வருடம் படிக்கும் பட்டய (டிப்ளமோ) மற்றும் (Graduate degree courses) பட்டப்படிப்பு DCE&BTech (Civil) கட்டிடக் கட்டுமான பொறியியல் படிப்பிற்கு தற்போது மிகுந்த வேலைவாய்ப்புகள் உள்ளது UPSC என்னும் அரசு தேர்வை எழுதி (Chartered Engineer licence) அரசின் பட்டய பொறியாளர் உரிமம் பெற்று சுயமாகவும், அரசின் திட்டப்பணிகளை பெற்றும், அனைத்து கட்டிட கான்ட்ராக்டர்களுக்கு பொறியாளர் உரிமம் பெற்றவரே சான்றளிக்கவேண்டும் என்பதால் கட்டிட பொறியியல் ஆலோசகராகவும் பணம் சம்பாதிக்கலாம்.

இப்படி பல எளிய படிப்புக்களை தவிர்த்து, புதுப்புது படிப்புகள் என்று பலர் வீசும் மாயவலையில், கடன்வாங்கி வெளிநாட்டிற்கு சென்று படிக்கவேண்டும் என விட்டில் பூச்சிகளாக சென்று விழுந்து பாழாகுவதைவிட, சுயமாக சிந்த்தித்து அதிக செலவு இல்லாத சில எளிய படிப்புக்களை தேர்வு செய்து படிப்பதே சிறந்தது. 

கல்விக்கண்காட்சி என்று கூறி அங்கு வரும் மாணவர்களையும் அவர்களது பெற்றோர்களின் மனதையும் மாற்றி தனியார் கல்லூரியில் சேர்க்க வலைவீசப்பட்டு, அந்த மாய வலையில் விழுந்த பல பெற்றோர்களின் பரிதாப நிலைமையை இன்றளவும் பார்க்கமுடிகிறது. 

கலந்தாய்வு என்று வரும்போது மாணவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும் தனக்குப் பிடித்த பாடத்தையே படிக்க விருப்பம் என்பதில் பிடிவாதமாக இருந்து வெற்றிபெறும் முனைப்போடு இருக்கவேண்டும். இல்லையென்றால் பேச்சாலே உங்களை மயக்கி தனியார் கல்லூரியின் காலி இடங்களை நம் தலையில் கட்டிவிட்டு அதற்குண்டான கமிஷன் தொகையை பெற்றுக்கொள்ள பல வழியிலும் பல அதிகாரிகள் முனைப்புடன் ஆதாயத்திற்காக செயல்படுகிறார்கள். 

மேல்நிலை +2 அதிக மதிப்பெண் எடுத்த எனது மகளை நான் சேர்த்த சட்டக் கல்லூரியில் (BBA-LLB) 20% விழுக்காடு கல்விக்கட்டணத்தில் தள்ளுபடி என்கிறார்கள்.  பிறகுதான் தெரிந்தது அது வெறும் முதல் ஆண்டிற்கு மட்டும்தானாம். இப்படி இன்னும் பலவழிகளில் பல தனியார் கல்விநிறுவனங்கள் அவர்களின் கல்லூரிக்கு ஆள் பிடிப்பவர்களுக்கு தாராளமாக பணம் தர முன்வருகிறார்கள் அதனால் தற்போது சில அரசு அதிகாரிகளும் அதற்க்கு விலைபோவதை பார்க்கமுடிகிறது.  எனது மகன் படிக்கும் பொறியியல் கல்லூரியில் (6-Years DCE+B.Tech-Civil) எனக்கு 25% கட்டண சலுகை தருவதாகவும் மேலும் 5 மாணவர்களை அந்தக்கல்லூரிக்கு அழைத்துவந்து பொறியியல் வகுப்பில் சேருங்கள் என்கிறார்கள் எனக்கு அதில் உடன்பாடில்லை என்று கூறிவிட்டேன். அப்படிப்பட்ட கல்லூரியில் ஏன் எனது பிள்ளைகளை சேர்த்தோம் என்றால் பெண்பிள்ளைகளுக்கு வீட்டிற்கு அருகில் இருக்கும் அந்த கல்லூரியில் சேர்ப்பது பாதுகாப்பு என்கிற ஒரு நோக்கமும் காரணம்.  


மாணவர்கள் நன்றாக சிந்தித்து செயல்படவேண்டும். தற்காலத்தில் வெகு விரைவில் வேலைவாய்ப்பை தரும், எளிமையான செலவுகளில் இருக்கும் படிப்புகளை தேர்ந்தெடுத்து படிப்பதே மிகச் சிறந்தது கடன்வாங்கி படிக்கவேண்டும் என்று அகலக்கால் வைத்து பிறகு வாங்கிய கடனை உரிய நேரத்தில் திருப்பி செலுத்தமுடியாதுபோனால் அந்த மாணவனின் எதிர்காலமே "கடனை செலுத்தாதவர்" என்கிற அவப்பெயரால் வாழ்நாள் முழுவதும் அனைத்துவங்கியிலும் அவரின் பெயர் கெட்டுப்போகும் நிலைக்குத் தள்ளப்படுவர். 

தற்போதைய சூழலில் திடீர் திடீர் என்று நிறுவனம் மூடுவிழா அல்லது நிறுவனத்தில் ஆட்குறைப்பு என்று பல வழிகளிலும் கிடைத்த வேலையையும் தக்கவைத்துக்கொள்ளமுடியாத சூழல் உள்ளது. அப்படி திடீரென்று வேலைபோகும்போது, மாற்று வேலை கிடைக்கும்வரை கடன் வாங்கி குடும்பச்செலவுகளை தாக்குபிடிக்கமுடியாமல் பலர் தற்கொலை என்கிற தவறான முடிவுக்கும் தள்ளப்படுவதை தாராளமாக பார்க்கமுடிகிறது. ஆகவே எந்தப் படிப்பாக இருந்தாலும் எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் சுயமாக தனது சொந்தக்காலில் நின்று சம்பாத்திக்கும் திறன்வாய்ந்த ஒரு கல்வியை தேர்வுசெய்து படிப்பது என்பது உங்களின் ஒளிமயமான வாழ்க்கைக்கு நீங்கள் செய்யும் முதலீடு என்று கருதவேண்டும்.

வாழ்க்கையில் எந்தத்தருணத்திலும் "முடிவெடுப்பது" என்பது மிக முக்கியமான ஒரு தருணம், அப்படிப்பட்ட உரிய நேரத்தில் சரியாக முடிவெடுக்கும் திறனில் உங்களுக்கு தெளிவான ஒரு சிந்தனை தேவை. அப்படிப்பட்ட தெளிவான ஒரு சிந்தனையை பெற நீங்கள்தான் உங்களை மாற்றி அமைத்துக்கொள்ளவேண்டும் அதற்கான பயிற்சியைமும் முயற்சியையும் தொடர்ந்து கடைபிடியுங்கள். 

"கற்க கசடறக் கற்பவை கற்றபின் 
நிற்க அதற்குத் தக." என்கிற திருவள்ளுவரின் வாக்கிற்கிணங்க 

கற்கவேண்டிய பாடங்களை சிறப்பாக பிழை இல்லாமல் கற்று, பிறகு கற்ற கல்விக்கு ஏற்ப நல்ல வழிகளில் வாழ்க. என உங்களது கல்வியால் நீங்கள் சிறப்படைய வாழ்த்துக்களைக் கூறி விடைபெறுகிறேன் .

கல்வி சிறந்த தமிழ்நாடு - புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு... வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ் நாடு http://youtu.be/qvCDPf1_Qeg

நன்றி கோகி-ரேடியோ மார்கோனி.   



No comments:

FREE JOBS EARN FROM HOME