பொதுவாக மூதாதையர்களுக்கு செய்யும் திதி தர்ப்பணம் ஏன் செய்யவேண்டும்? எப்படி செய்யவேண்டும்? எப்போது செய்யவேண்டும் என்பன போன்ற 101-விவரங்களை ஒன்று திரட்டி இந்த பதிவை எழுதுகிறேன்.
1. மாதங்களில் சிறந்த "பித்ருப்யோ நம:, மாத்ருப்யோ நம:" என்று கூறும் புரட்டாசி மாத மகாளயபட்சம், மிகச்சிறந்த மூதாதையார்களின் வாழ்த்துக்களை பெரும் நாட்கள் அமைந்த மாதமாக போற்றப்படுகிறது.
2. வீட்டில் பசியால் வாடும் தனது வயதான பெற்றோர்களுக்கு சாப்பாடு கொடுக்காமல் தெய்வத்திற்கு சர்க்கரைப் பொங்கல் போன்றபொருட்களை நிவேதனம் செய்வதாலும் ஆடை இன்றி பெற்றோர்கள் கஷ்டப்படும் போது தெய்வங்களுக்கு பட்டு வஸ்திரங்களை அணிவிப்பதாலும் எந்த பலனும் கிடைக்காது. அப்படி செய்பவர்களுக்கு பித்ருதோஷம்தான் ஏற்படும். அதாவது பிள்ளைகள் கிடையாது, அப்படியே பிள்ளைகள் பிறந்தாலும் அவர்கள் இருந்தும் பிள்ளைகள் இல்லாதவர்களைப்போல எவ்வித ஆதரவுமின்றி வாழ்வார்கள்.
3. பொதுவாக மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யும் நபர் தர்ப்பணம் செய்வதற்கு முன்பாக, மற்ற இடங்களில் நடைபெறும் எந்த ஒரு பூஜைகளிலும் ஹோமங்களிலும், ஆலயநிகழ்ச்சிகளிலும் தனது பெயர் சொல்லி சங்கல்பம் செய்து கொள்ளக்கூடாது.
4. பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைச் செய்ய வேண்டும்.
5. சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசை அன்று பித்ருக்களுக்கு பசியும், தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன.
6. அமாவாசை திதியை பித்ரு திதி என்று கூறி அன்றைய நாளில் இறந்தவர்களின் பசியையும் தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்ததண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர் களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
7. அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக்கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று நம்பப்படுகிறது. அன்றைய தினம் வீட்டில் தர்ப்பணம் செய்து அவர்களுக்கு எள் கலந்த தண்ணீரை தரப்படவில்லை என்றால அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தப்பட்டு செல்கிறார்கள் என்றும், அதனால் பித்ரு லோகத்தை அதிகாரம் செய்யும் தேவதைகள் சாபம் தந்து விட்டுச் செல்கிறார்கள் என்றும் கூறப்படுகிறது. தர்ப்பணம் முடிந்ததும் தாம்பாளத் தட்டிலிருக்கும் தர்ப்பை புற்களுடன் சேர்ந்த எள்ளும் தண்ணீருமான தர்ப்பண ஜலத்தை துளசி செடி இருக்கும் மாடத்திலோ, கோவில் அல்லது வீட்டின் வாசல்படி அமைந்திருக்கும் பகுதியில் வடக்கு பக்கமாக கால் படாத இடத்தில் கொட்டவேண்டும்.
8. மார்கழி, தை, மாசி, பங்குனி ஆகிய நான்கு மாதங்களிலும் கிருஷ்ணபட்ச அஷ்டமி திதியன்று அஷ்டகை எனப்படும் சிராத்தம் செய்யவேண்டும்.
9. மன்வாதி 14 நாட்களிலும் யுகாதி 4 திதிகளிலும் பித்ருக்களுக்கு கொடுக்கப்படும் தர்ப்பணம் ஆயிரம் ஆண்டுகள் வரை முன்னோர்களுக்குமகிழ்ச்சியைக் கொடுக்கும்.
10. மன்வாதி யுகாதி நாட்களில் செய்யப்படும் புண்ணிய நதி நீராடல், ஜெபம், ஹோமம் ஆகியவை கூடுதல் பித்ரு புண்ணியத்தைத் தரும்.
11. தமிழ் மாத பிறப்பன்று பித்ருக்களை வழிபட்டு சூரியனை வணங்குவதற்கு மிகச் சிறந்த நாள். அன்று சூரியனுக்குச் செய்யும் பூஜை மற்றும்ஏழைகளுக்குச் செய்யப்படும் தானம் ஆகியவை அளவற்ற பலனைத்தரும்.
12. ஒரு வருடத்தில் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாட்கள் மொத்தம் தொன்னூற்று ஆறு நாட்கள். இவைகளில் 14 மன்வாதி நாட்கள், யுகாதி நாட்கள் 4 ,மாதப்பிறப்பு நாட்கள் 12, அமாவாசை 12, மகாளய பட்சம் 16, வ்யதீபாதம் 12 , வைத்ருதி 12 , அஷ்டகா 4 , அன்வஷ்டகா 4 , பூர்வேத்யு நாட்கள் 4. இந்த நாட்களில் செய்யப்படும் தர்ப்பணத்தால் பித்ருக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார்கள்.
13. இந்த 96 நாட்களை விட மிக மிக உத்தமமான நாள் என்பது தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்ய வேண்டி நாள்தான்.
14. துவாதியை விட அமாவாசையும், அமாவாசையை விட தாய் தந்தையருக்கு சிராத்தம் செய்யும் நாட்களும் மிகவும் புண்ணியங்களைத்தரும். ஆகவே அதிக புண்ணி யங்களைத் தரும் தந்தையரின் சிராத்தத்தை எக்காரணம் கொண்டும் செய்யாமல் விட்டு விடக் கூடாது.
15. ஒருவன் தனது தாய் தந்தைக்கு சிரார்த்தம் செய்யாமல் எனக்குச் செய்யும் பூஜைகளை நான் ஏற்றுக் கொள்வதில்லை என விஷ்ணுவும் சிவனும் கூறியுள்ளனர்.
16. இறந்தவருக்கு வருஷம் ஒரு முறையாவது சிராத்தத்தைச் செய்ய வேண்டும். ஏனென்றால் அன்றைய நாளன்று இறந்த ஜீவன் காற்றுவடிவில் இறந்தவரின் குழந்தைகள் வாழும் வீட்டின் வாசலில் வந்து அவர்கள் செய்யும் சிராத்தத்தில் தரும் உணவை சாப்பிடுவதற்காககாத்துக் கொண்டிருக்குமாம்.
17. முறையாக உணவு செய்து வைத்து, ஹோமம், பிண்டதானம் செய்து, நடத்தப்படும் சிராத்தத்துக்கு பார்வணசிராத்தம் என்று பெயர்.
18. ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், உணவு மட்டும் வைத்து செய்யப்படும் சிராத்தம் சங்கல்ப சிராத்தம்எனப்படும்.
19. ஒருவருக்கு சாப்பாடு போட என்னென்ன பொருட்கள் தேவையோ அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற பொருட்கள் அனைத்தையும்,சமைக்காமல் அப்படியே தட்சணையுடன் அளித்துச் செய்யும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.
20. சிராத்தம் செய்தால் எவ்வளவு பணம் செலவாகுமோ அந்த பணத்தை நான்கு மடங்கு அதிகமாக்கி தட்சணையாக தந்து செய்வதுஹிரண்ய சிராத்தம் எனப்படும்.
21. சிராத்தம் செய்ய எந்த ஒரு வசதியும் இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை தர்ப்பணமாக செய்யலாம்.
22. சிராத்தம் நடத்தப்படும் இடம், சிராத்தம் செய்யும் நேரம், சிராத்தத்தில் பித்ருக்களாக பாவித்து பூஜிக்கப்படும் நபர், சிராத்தத்தில்உபயோகிக்கும் பொருட்கள், சிராத்தம் செய்யும் நபர் ஆகியவை சிராத்தத்துக்கு முக்கியமானவை. இவைகள் தூய்மையானவைகளாகஇருந்தால் சிராத்தத்தின் முழுமையான பலன்கள் கிடைக்கும்.
23. பித்ருக்களை சிராத்தம் செய்ய வேண்டிய நாளன்று முறையாக ஹோமம் செய்து சாப்பாடு போட்டு சிராத்தம் செய்து அவர்களுக்குஉணவளித்து, அவர்களை திருப்தி செய்தால் அவர்கள் அவர்களது குடும்பத்தினருக்கு நீண்ட ஆயுள், அழியாப்புகழ், உடல் வலிமை,செல்வம், பசுக்கள், சுகம், தானியங்கள் ஆகியவற்றை தருகிறார்கள்.
24. நமது பித்ருக்களிடத்தில் சிராத்தத்தை சிரத்தையுடன் செய்வதாகவும், நல்ல உயர்ந்த ஆடை, தீர்த்த பாத்திரம் சிராத்தத்தில் வாங்கித்தருவதாகவும், பிரார்த்தனை செய்து கொண்டு அவ்வாறே சிராத்தத்தை நடத்தினால் நிச்சயம் உங்கள் விருப்பம் நிறைவேறும். விரும்பியபலன் கைகூடும்.
25. ஒரே நாளில் ஏராளமான பித்ருக்களுக்கு தனித்தனியாக பல பேர் சிராத்தம் செய்யும் போது சிரார்த்த உணவு அவரவர்களின் பித்ருக்களுக்கு எவ்வாறு சரியானமுறையில் சென்றடைகிறது என்ற சந்தேகம் சிலருக்கு ஏற்படும். இதை கருத்தில் கொண்டு தான் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும் தர்ப்பணம் செய்யும் போது சொல்கிறார்கள் . இதனால் ஒருவர் கொடுக்கும் தர்ப்பணம் அவரவர்களுக்கு சரியாக சென்றடையும்.
26. பெற்றோர்களின் வருஷ சிராத்தமும் மாதப்பிறப்பும் சேர்ந்தால் மாதப்பிறப்பை முதலில் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷசிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
27. அமாவாசையும் மஹாளயமும் ஒரே நாளில் வந்தால் முதலில் அமாவாசை தின தர்ப்பண பூஜைகளை செய்து விட்டு பிறகு மஹாளயத்தைசெய்ய வேண்டும்.
28. பெற்றோர்களின் வருஷாந்தர சிராத்தமும் மன்வாதி அல்லது யுகாதியும் ஒன்று சேர்ந்தால் முதலில் மன்வாதி அல்லது யுகாதிதர்ப்பணங்கள் செய்து விட்டு பிறகு பெற்றோர்களின் வருஷ சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
29. தாய் தந்தை இருவரில் ஒருவருக்கு மாஸிகமும் மற்றொருவருக்கு வருஷாந்திர சிராத்தமும் ஒரே நாளில் நேர்ந்தால், முதலில்வருஷசிராத்தம் செய்து விட்டு பிறகு மாஸிகத்தை செய்ய வேண்டும்.
30. தாய் தந்தை இருவருக்கும் ஆண்டு தோறும் செய்யும் சிராத்தம் ஒரே நாளில் வந்தால் முதலில் தந்தைக்கு சிராத்தம் செய்ய வேண்டும்.பிறகு தாய்க்கு அதே நாளில் சிராத்தம் செய்ய வேண்டும்.
31. பெற்றோர் இறந்த மாதம் பட்ச திதியன்று உறவினர்களின் இறப்புத்தீட்டு அல்லது உறவினர்களுக்குக் குழந்தை பிறந்த தீட்டு ஏற்பட்டுவிட்டால், தீட்டு எப்போது முடிவடைகிறதோ அன்று பிராயசித்தம் செய்தல் வேண்டும். பிறகு விட்டுப்போன சிராத்தத்தைச் செய்ய வேண்டும்.
32. இறைவனின் ரூபமான தேவதைகளை விட பித்ருக்கள் அதிமுக்கியத்துவம் வாய்ந்தவர்கள். எனவே முதலில் உங்கள் மறைந்த முன்னோர்வழிபாட்டை பிரதானமாக நடத்துங்கள்.
33. சிராத்தம், தர்ப்பணம் செய்யாதவன் சண்டாளனாகப் பிறப்பான் என்று புராணங்களில் கூறப்பட்டுள்ளது.
34. உடல் நிலை சரியில்லா தவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு சிராத்தம் செய்ய வேண்டும்.
35. நம்மைவிட்டு பிரிந்த நம் பித்ருக்கள் அனைவரும் சக்தி நிறைந்தவர்கள். அவர்கள் ஆசீர்வாதத்தினால் கோடி கோடியாக புண்ணியமும்,செல்வமும் நமக்கு கிடைக்கும்.
36. மஹாளயபட்சம் 15 நாட்களும் பித்ருக்களுக்கு தாகமும், பசியும் மிக அதிகமாக இருக்கும். அதனால் அவர்கள் அருளைப் பெறவேண்டும். அந்த 15 நாட்களில் நமது உறவினர்கள் இறந்து விட்டால் நாம் சிராத்தம் செய்ய வேண்டாம் என்று கூறுவது தவறு. ஆனால் பிறகு அடுத்த திதியில் கட்டாயமாகச் செய்ய வேண்டும்.
37. பித்ரு வர்க்கம், மாத்ரு வர்க்கம், பித்ரு காருணீக வர்க்கம் என்று பித்ருக்கள் மூன்று வகைப்படுத்தப்பட்டுள்ளார்கள். அதாவது அப்பா வகையை சார்ந்த பித்ருக்கள் பித்ருவர்க்கம் எனப்படுவார்கள். அம்மா வகையை சார்ந்த பித்ருக்கள் மாத்ருவர்க்கம் எனப்படுவார்கள். சித்தப்பா, மாமா, குரு, நண்பர்கள் காருணீகவர்க்கம் எனப்படுவார்கள். இவர்களை நினைவு கூறி தர்ப்பணங்களை செய்ய வேண்டும்.
38. “மக்களுக்கு தொண்டாற்றி, சுயநலமின்றி அரிய இறைப்பணிகளைப் புரிந்தோர் மட்டுமே பித்ருலோகம் அடைகின்றனர் என்பதைகருடபுராணம் தெளிவாக எடுத்துக் கூறுகின்றது.
39. நமக்காக எத்தனையோ கஷ்டங்களை தாங்கிய நம் பித்ருக்களுக்கு, மகாளபட்சம், அமாவாசை போன்ற திதி தர்ப்பணம் செய்யும் நாட்களில், உணர்ச்சிகளைத் தூண்டும் வெங்காயம், பூண்டு, வாசனை திரவியங்கள் போன்றவை உபயோகிக்க வேண்டாம். அம்மாவாசை போன்ற நாட்களில் பூலோகம் சுருங்கிவிடுவதால் அந்த பூமியில் வாழும் அனைத்து ஜீவராசிகளுக்கும் ஜீரணசக்தி குறைத்துவிடும். ஆகவே அம்மாவாசை நாட்களில் விரதமிருப்பதும், குறைவாக உண்பதும் சிறந்தது. அம்மாவாசை நாட்களில் தீவிர சிகிச்சை பிரிவில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பவர்கள் பிழைப்பது கடினம் என்று கூறுவார்கள், காரணம் அன்று நமது உடலின் ஜீரண சக்தி குறைவாகவும், உடலுக்கு செலுத்தும் மருத்துவ சக்தியை கிரகித்துக்கொள்கிற தன்மையும் குறைவாகவே இருக்கும்.
40. கார்த்திகை மாதம் உத்திராயண புண்ணியகாலம் சுக்ல பட்சம், பவுர்ணமி திதியில் தானம் செய்ய வேண்டும். கிருஷ்ணபட்சம்(தேய்பிறை) துவாதசி திதியில் தானங்கள் அளிக்கலாம்.
41. எள், உப்பு, பொன், பருத்தி ஆடை, இரும்பு ஆகியவற்றை தானம் அளிப்பது மிகவும் நல்லது. தானம் பெற வருபவரை மிகுந்தமரியாதையுடன் நடத்தி தானமளிக்க வேண்டும்.
42. பித்ருக்கள் எங்கிருந்தாலும் சரி, தத்தம் சந்ததியருடைய நல்வாழ்விற்காகப் பாடுபடுகின்றனர் என்பதில் எள்அளவும் சந்தேகம்கிடையாது.
43. ஒருவர் மரண படுக்கையில் அவதிப்படும்போது அவரது மகன் அல்லது மகள் மகம் நட்சத்திரத்தன்று அகத்திக்கீரையை எருமைமாட்டிற்கு தானம் அளித்தால் மரண அவதி நீங்கும்.
44. வீட்டில் வயதானவர்கள் படுக்கையோடு அவதியுற்றால் பாய், தலையணை, படுக்கை விரிப்பு போன்றவற்றை தானம் செய்வது நன்மைஅளிக்கும். எள்ளுருண்டை, கடலை உருண்டை போன்றவற்றை அளிப்பது பித்ருக்களின் ஆசியைக் கூட்டும்.
45. சாஸ்திரப்படி, சிரார்த்த காரியங்கள் செய்பவர் அன்றய தினத்தின் திருமணம் உள்ளிட்ட விழாக்களிலும் மற்றவர் வீடுகளில் விருந்து உணவும், உண்ணக்கூடாது.
46. சிராத்தம் செய்யக்கூடியவர் முதல் நாள் முகச்சவரம் செய்யக்கூடாது. எண்ணெய் தேய்த்து குளிக்கக் கூடாது, மனைவியுடன் சேர்ந்துஉறங்கக் கூடாது, பிரஷ் கொண்டு பல் தேய்ப்பதும், வெற்றிலை தாம்பூலம் போடுவதும் கூடாது.
47. மங்கள நிகழ்ச்சிகள் நம் வீட்டில் நடக்கும் பொழுது முதலில் பித்ருக்களின் ஆசியை நாம் முழுமையாக பெற வேண்டும். இது மிக, மிகமுக்கியம்.
48. திரயோதசி பதிமூன்றாம் நாளன்று பித்ரு காரியங்களை சரிவர நடத்துபவனுக்கு அறிவு, ஞான சக்தி, பசுக்கள் தேக ஆரோக்கியம்,சுதந்திரத்தன்மை, சிறந்த விருத்தி, தீர்க்கமான ஆயுள் பலம், ஐஸ்வர்யம், அனைத்து பலன்களும் தவறாமல் கிடைக்கும்.
49. சதுர்த்தசி அன்று பித்ரு வழிப்பாட்டை சிறப்பாக செய்பவர்களுக்கு அவர்களுடைய பித்ருக்கள் ஆயுதங்களால் தாக்கப்பட்டு இறந்திருந்தால் திருப்தி அடைவார்கள்.
50. மஹாளய அமாவாசை என்பது மிகவும் புண்ணிய நாளாகும். அன்று நம் பித்ருக்களை நினைத்து மனதார வணங்கினால் சகலசவுபாக்கியங்களும் தேடி வரும்.
51. மாகளாய பட்சத்தின் 16 நாட்களும் சிராத்தம் செய்வது ஒப்பற்ற உயர்ந்த வாழ்வை அளிக்கும்.
52. தர்ப்பணம் எனும் சொல்லுக்கு திருப்திப்படுத்துதல் என்று பொருள். இதில் வரும் மந்திரங்கள் அர்த்தம் பொதிந்தவை. அற்றை நன்குதெரிந்து கொண்டு செய்வதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.
53. தாய், தந்தையின் இறந்த திதிகளை மட்டும் நினைவு கொண்டு தர்ப்பண காரியங்கள் செய்தால் போதும் எனும் பழக்கம் இன்றுபலரிடத்தில் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தில் இறந்த முன்னோர்கள் அனைவரையும் நினைவு கூர்ந்து தர்ப்பண காரியங்கள் செய்ய வேண்டும்.அதுதான் சிறப்பானது. முழு பலன்களையும் தரவல்லது.
54. குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மஹாளய சிராத்தம் செய்வது மிக முக்கியம்.
55. துவாதசி பன்னிரெண்டாம் நாளன்று பித்ரு பூஜை செய்பவன் சொர்ண லாபம் பெறுவான். குடும்பத்தில் சன்னியாசம் வாங்கிச் சென்றவர்களுக்கு துவாதசி அன்று மகாளயசிரார்த்தம் செய்வது மிக முக்கியம்.
56. கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. புண்ணிய ஷேத்திரங்களிலும், திருவாலங்காடு, திருவள்ளூர் , ராமேஸ்வரம், திருமயம் அடுத்து வரும் அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர் , காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
57. திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர் பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது . இங்கு ஸ்ரீராமரும், லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கு தர்ப்பணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
58. மகாளய அமாவாசையில் பித்ருக்களை வழிபடாவிட்டால் திருமண தடை, குழந்தை பாக்கியம் இல்லாமை, நோய், வறுமை போன்றவை ஏற்படக்கூடும் என்று கருடபுராணம்கூறியுள்ளது.
59. பூசணிக்காய்க்குள் அசுரன் இருப்பதாக ஐதீகம் உள்ளது. எனவே பித்ரு பூஜை செய்யும் போது பூசணிக்காயை தானமாகக் கொடுத்தால், அசுரன் நம்மை விட்டு போய்விடுவான் என்று கருதப்படுகிறது.
60.தற்கொலை செய்பவர்களின் ஆத்மாக்கள் அவதிப்பட்டுக் கொண்டிருக்கலாம். அவர்களுக்குரிய தர்ப் பணம் செய்யும்போது அந்த ஆத்மாக்கள் விஷ்ணுவின் ஆசியை பெற வழிவகை ஏற்படும்.
61. மகாளய அமாவாசை தினத்தன்று மறைந்த முன்னோர்களின் படங்களுக்கு துளசிமாலை அணிவிப்பது நல்லது .
62. மகாளய அமாவாசை தினத்தன்று பசுவுக்கு கீரை கொடுத்தால், அது மறைந்த உங்கள் பாட்டி தாத்தாவுக்கும், (மூதாதையர்கள் மறுபிறவி எடுத்திருந்தாலும்) அந்தப்புண்ணிய பலன் சென்றுசேர்ந்து உரியபலன்களை கொடுக்கும்.
63. மகாளய அமாவாசை நாட்களில் பித்ருக்களின் தர்ப்பண காரியங்களை முடித்துவிட்டுத்தான், நெற்றியில் பெண் குங்குமம் / ஆண்கள் திருநீறு தரித்தல் வேண்டும். தர்ப்பண காரியங்கள் முடித்தபிறகுதான் வீட்டில் பூஜையறையில் விளக்கு/தீபம் ஏற்றவேண்டும். மற்றும் வீட்டின் வாசல் கோலம் போடுவது, கோவிலுக்கு போவது, சங்கல்பம் பூஜை செய்வது போன்ற பிற காரியங்களை செய்யவேண்டும் என்று சாஸ்திரம் கூறுகிறது.
64. மகாளய அமாவாசை நாட்களில் எக்காரணம் கொண்டும் மறைந்த முன்னோர்களை திட்டவோ, விமர்சனம் செய்யவோ கூடாது.
65. மகாளய அமாவாசை நாட்களில் மோட்சதீபம் ஏற்றி வழிபட்டால் பித்ருக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
66. ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக் கிழமைகள் மற்றும் ஜென்ம நட்சத்திரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டியதிருந்தால் எள்ளுடன் அட்சதையையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
67. தர்ப்பணத்தை எப்போதும் கிழக்கு முகமாக பார்த்தபடி தான் கொடுக்க வேண்டும்.
69. தர்ப்பணத்தில் பயன்படுத்தும் தர்பணப்புல் கேது கிரகத்துக்கு உரியதாகும். தர்ப்பைக்கு நாம் எந்த அளவுக்கு மரியாதை கொடுக்கிறோமோ, அந்த அளவுக்கு அது கேது பகவான் மூலம் பலன்களை பெற்றுத் தரும். குறிப்பாக பெரியவர்களின் தொடர்பு கிடைக்கும்.
70. பசு மாடுகள் கட்டப்பட்ட தொழுவத்தில் இருந்தபடி சிரார்த்தம் செய்வது அளவற்ற பலன்களைத் தரும்.
71. தர்ப்பணம் மற்றும் சிரார்த்தம் நடைபெறும் நாட்களில் அவை முடியும் வரையில் அதைச் செய்பவர் பால், காபி முதலிய எதையும் சாப்பிடக் கூடாது.
72. முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்த நீரை மற்றவர் கால்களில் மிதிக்கும்படி கொட்டக்கூடாது.
73. மகாளய அமாவாசை தினத்தன்று புனித நதிகளில் நீராடுவது நல்லது. அப்போது இரு கைகளாலும் நதி நீரை எடுத்து விடுவது (அர்க்கியம் செய்வது) மிகுந்த நன்மையைத் தரும். சூரியனை பார்த்தபடி 3 தடவை நீர்விடுதல் வேண்டும்.
74. பகவத் கீதை : அத் :: 2 - 18 "ஆத்மா என்பவன் நிலையானவன் ; அழிவில்லாதவன் கணக்கிட முடியாதவன் ;ஆயினும் அவனுடைய ஸ்தூல வடிவங்கள் முடிவடையக் கூடியவையே . ஆதலால், போர்செய் .!"
75. பகவத் கீதை : அத் : 2 - 19 "ஆத்மா கொல்வதும் இல்லை, கொல்லப்படுவதும் இல்லை . அப்படி நினைப்பவர்கள் அறியாதவர்கள்."
76. மகாளய பட்சம் - விளக்கம் & மகாளய பட்சத்தின் ஒவ்வொரு திதியிலும் தர்ப்பணம் கொடுப்பதன் பலன்கள் :-
"மகாளயம்' என்றால் "கூட்டமாக வருதல்'. மறைந்த நம் முன்னோர் மொத்தமாக கூடும் நேரமே மகாளய பட்சம். "பட்சம்' என்றால் 15 நாட்கள். மறைந்த முன்னோர் 15நாட்கள் (சில சமயங்களில் 16 ஆக மாறுபடும்) நம்மோடு தங்கும் காலமே மகாளய பட்சம்.
இது புரட்டாசி மாத பவுர்ணமிக்கு மறுநாள், பிரதமை திதியில் துவங்கி, அமாவாசை வரை நீடிக்கும். புரட்டாசியில் வரும் அந்த அமாவாசையே மகாளய அமாவாசை எனப்படும். தை அமாவாசை, ஆடி அமாவாசை ஆகியவற்றை விட உயர்ந்தது இது.
மற்ற மாதங்களில் அமாவாசையன்று முன்னோரை நினைத்து தர்ப்பணம் செய்வோம். அவர்கள் மறைந்த தமிழ் மாதத்தில் வரும் திதியில், சிராத்தம் முதலியன செய்வோம். ஆனால், மகாளய பட்ச காலத்தில் பிரதமை துவங்கி அமாவாசை வரை தினமும் தர்ப்பணம் செய்ய வேண்டும்.
முதல்நாள் - பிரதமை - பணம் சேரும்
2ம் நாள் - துவிதியை - ஒழுக்கமான குழந்தைகள் பிறத்தல்
3ம் நாள் - திரிதியை - நினைத்தது நிறைவேறுதல்
4ம் நாள் - சதுர்த்தி - பகைவர்களிடமிருந்து தப்பித்தல்
5ம் நாள் - பஞ்சமி - வீடு, நிலம் முதலான சொத்து வாங்குதல்
6ம் நாள் - சஷ்டி - புகழ் கிடைத்தல்
7ம்நாள் - சப்தமி - சிறந்த பதவிகளை அடைதல்
8ம் நாள் - அஷ்டமி - சமயோசித புத்தி, அறிவாற்றல் கிடைத்தல்
9ம்நாள் நவமி - சிறந்த வாழ்க்கைத்துணை, குடும்பத்திற்கேற்ற மருமகள் அமைதல், பேத்தி, புத்திசாலியான பெண் குழந்தைகள் பிறத்தல்.
10ம் நாள் - தசமி - நீண்நாள் ஆசை நிறைவேறுதல்
11ம்நாள் - ஏகாதசி - படிப்பு, விளையாட்டு, கலையில் வளர்ச்சி
12ம் நாள் - துவாதசி - தங்கநகை சேர்தல்
13ம்நாள் - திரயோதசி - பசுக்கள், விவசாய அபிவிருத்தி, தீர்க்காயுள், ஆரோக்கியம், சுதந்திரமான வேலை அல்லது தொழில்
14ம்நாள் - சதுர்த்தசி - பாவம் நீங்குதல், எதிர்கால தலைமுறைக்கு நன்மை.
78. நவக்கிரக தோஷம் நீக்கும் மகாளய அமாவாசை:-
15ம் நாள் - மகாளய அமாவாசை தினத்தில் - முன் சொன்ன 14 தினங்களின் அத்தனை பலன்களும் நம்மைச் சேர அன்றய மகாளய இறுதி தினத்தில் முன்னோர் ஆசிகளை வாரிவழங்குவதால் சகல விதமான தோஷங்களும், நவக்கிரக தோஷமும் நீங்குவதாக... இந்த மகாளய அம்மாவாசை அன்று ஒரேநாளில் செய்யும் பித்துருக்களின் தர்ப்பணம், திதி, ஹோமம் போன்றவை பலமடங்கு பலன்தரும் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. .
பித்ருப்யோ நம: மாத்ருப்யோ நம:
79. மஹாளய தர்ப்பணம் ஏன் ..??? ( தெரிந்து கொள்ளுங்கள் )
கர்ணன் மகாபாரத போரில் கொல்லப்பட்ட பிறகு, உரிய மரியாதைகளோடு யமன் அவரை அழைத்துக் கொண்டார். யமன் கர்ணனிடம் நீ நிறைய புண்ணியங்களை செய்ததால் சொர்கத்தை நான்றாக அனுபவித்து கொள் என்றார். கர்ணன் மகிழ்வுடன் சொர்கத்தை அனுபவிக்கிறார். சில காலம் கழித்து அவருக்கு பசிக்கிறது. தன்னுடன் உள்ளவர்களிடம் உணவு பரிமாறும் இடம் எங்கே என்று கேட்கிறார். சொர்க்க வாசிகள் திகைப்படைந்து, அவரிடம் இங்கிருப்பவர்களுக்கு பசிக்காது அதனால் உணவு உண்ணும் தேவையே இருக்காது என்கிறார்கள்.
தேவ குரு பிரகஸ்பதி நடப்பனவற்றை கவனித்து விட்டு, ஆழ்ந்த தியானத்தில் இதற்கான விடையை கண்டுபிடிக்கிறார். பிறகு கர்ணனிடம் வந்து கர்ணனின் ஆட்காட்டி விரலை சுவைக்க சொல்கிறார். கர்ணன் ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்துவிடுகிறது. கர்ணன் மிகவும் வியப்படைந்து இதற்கான காரணம் என்ன என வினவுகிறார். குரு விளக்குகிறார் " கர்ணா, பிறப்பால் நீ ஒரு வள்ளல். நீ யார் எதை கேட்டாலும் உடனே கொடுத்து விட்டாய். ஆனால் நீ அன்னதானம் மட்டும் செய்யவில்லை, அதனால் தான் நீ இங்கே பசியை உணர்ந்தாய்".
ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டதே ஏன்? எனக் கேட்கிறார் கர்ணன்.
குரு விளக்குகிறார் " கர்ணா, ஒரு முறை ஒரு ஏழை பிராமணர் உன் வீட்டிற்கு வந்து உணவு கேட்டார். நீ பொதுவாக அன்னதானம் செய்யும் வழக்கம் இல்லாததால் அதை மறுத்துவிட்டாய், ஆனால் உன் ஆட்காட்டி விரலால் அன்னதானம் நடக்கும் இடத்தை அந்த ஏழை பிராமணர்க்கு காட்டினாய். அவரும் அங்கே சென்று சாப்பிட்டு தன் பசியை ஆற்றிக்கொண்டார். அந்த புண்ணியம் உன் ஆட்காட்டி விரலில் இருந்ததால் நீ ஆட்காட்டி விரலை சுவைத்தவுடன் பசி தீர்ந்து விட்டது. "
கர்ணன் கண்களில் நீர் திரண்டு விட்டது. உடனே யம தர்ம ராஜனிடம் சென்று முறையிடுகிறார். நான் ஒரு பட்ஷம் (பதினைந்து நாள்) மனித உடலுடன் பூலோகம் செல்ல அனுமதி வேண்டும், நான் போய் அன்னதானம் செய்து விட்டு வருகிறேன் என்கிறார். யமதர்ம ராஜனும் அனுமதிக்கிறார்.
கர்ணனும் பூலோகம் வந்து யாரும் அடையாளம் கண்டு கொள்ளாத இடத்தில் அன்ன தானம் செய்கிறார். கர்ணன் மிகவும் நல்ல நோக்கத்துக்காக இதை மகிழ்வுடன் செய்கிறார். பதினைந்து நாட்கள் முடிந்தவுடன் யமன் மீண்டும் வந்து மனித உடலை துறந்து விட்டு சொர்கம் வர சொல்கிறார். கர்ணன் மகிழ்வுடன் செல்கிறார்.
யமன் நகர்ந்து கொண்டே சொல்கிறார். மனிதர்கள் பூலோகத்தில் உள்ள சுகங்களை அனுபவிக்கவே மீண்டும் மீண்டும் பூலோகம் வர வேண்டும் என்று கேட்பார்கள். ஆனால் நீங்கள் எதற்காக மனித உடலுடன் பூலோகம் வந்தீர்களோ அதை முழுமையாக முடித்து விட்டு, உங்கள் வார்த்தைகளை காப்பாற்றி விட்டீர்கள். நீங்கள் இப்போது ஒரு வரம் கேட்கலாம் என்கிறார்.
கர்ணன் " யம தர்ம ராஜரே! மனிதர்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, உணவு அளிக்க மறந்து விடுகிறார்கள். அதனால் இந்த பக்ஷத்தில் முன்னோர்களுக்காக செய்யும் திதி, மற்றும் அன்னதானம் கர்மங்கள் செய்ய சந்ததி இல்லாத முன்னோர்கள்களை கூட சென்று அடைய வேண்டும். கர்ம வினைகளால் பூமிக்கும் சொர்கத்துக்கும் இடையில் தவிக்கும் முன்னோர்களையும் இந்த பலன் சென்றடய வேண்டும் என கேட்கிறார்."
யமன் மகிழ்வுடன் ஒப்புகொள்கிறார்.
" யார் இந்த பக்ஷத்தில் உணவு அளிக்கிறார்களோ அவர்கள் பாக்கியம் பெற்றவர்கள்."
உலகுக்கே சூரியன் சொந்தம் என்பதால், அவரது புத்திரனான கர்ணனும் நமக்குச் சொந்தமாகிறான். அவன் பூமியில் வந்து தர்மம் செய்யும் மகாளயபட்ச காலத்தில், நாம் எல்லோருமே முன்னோர்களை வரவேற்று 14 நாட்களும் தர்ப்பணம் முதலானவை செய்ய வேண்டும். கடைசி நாளான மகாளய அமாவாசையன்று முன்னோருக்கு பெரும் படையல் படைத்து, அதை ஏழைகளுக்கு அன்னதானம் செய்ய வேண்டும். மகாளயபட்ச காலத்தில், நம் முன்னோருக்காக விரதம் அனுஷ்டிக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம், முன்னோரின் ஆசி நமக்கு கிடைக்கும். நமக்கு மட்டுமின்றி, உலகிலுள்ள பிறருக்கும் பசியின்றி உணவு கிடைக்கும் என்பது ஐதீகம்.
சர்வம் கிருஷ்ணார்ப்பயாமி...
80. எளிய தர்ப்பணம் BRIEF THARPANA WORSHIP OF OUR FATHERS & GRAND FATHERS:- திருச்சி லால்குடி அருகே பூவாளூர் திருத்தலத்தில் பல்குனி நதிக்கரையில் நிறைவேற்றப்படும் தர்ப்பணங்கள் விரைவில் நமது முன்னோர்களுக்கு முக்தியை அளிக்கும் சக்தி உடையது. இது தென்னிந்திய கயா ஆகும்.
குல சந்தாரகம் சேதி ச்ராத்தமாஹூர் மநீஷிண:
-மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145
“ இறந்தோரை உத்தேசித்துச் செய்யப்படும் தர்ப்பணமானது செல்வம், புகழ், ஆயுள், ஸ்வர்கம் முதலிய நன்மைகளை அளிக்கும். எதிரிகளை ஒழிக்கும், தன் குலம் தழைத்தோங்கச் செய்யும்” —மஹா பாரதம், அநுசாஸந பர்வம் ஸ.145
82. நம் மூன்று தலைமுறையில் உள்ள முன்னோருக்குச் செய்கிற ஆராதனை, நம்மையும் நம் சந்ததியையும் இனிதே வாழ வைக்கும் என்கிறது கருடபுராணம்.
83. பித்ருக்கள் எனப்படும் நம் முன்னோர் வசு, ருத்ர, ஆதித்யர் ஆகிய மூவரின் தொடர்புடன் இணைந்தவர்கள். ஸ்தூல வடிவத்தை விட்டு, சூட்சும வடிவில் இருப்பவர்கள்.
84. தேஜஸ் - வாயு போன்ற லேசான பஞ்சபூதங்களைத் தழுவி பரவியிருப்பவர்கள். திவ்ய பித்ருக்களைப் போல் தெய்வாம்சம் பொருந்தியவர்கள். தர்ப்பணம் வாயிலாகவும் பிண்டம் வாயிலாகவும் வழிபட வேண்டியவர்கள்.
85.பித்ருலோகம், சூரியனுக்கு அப்பால் பல லட்சம் மைல் தொலைவில் இருப்பதாக கருடபுராணம் கூறுகிறது. பித்ருக்கள் அங்கிருந்து தங்கள் குடும்பத்தினர் நலமாகவும் வளமாகவும் வாழ அருளாசி வழங்குகின்றனர்.
86. ஒரு ஜாதகத்தில் பூர்வபுண்ணிய ஸ்தான பலம் குறைந்தவருக்கு சுகமாக வாழ துணைபுரிவது தெய்வாம்சம் பொருந்திய முன்னோர்கள் தான். இவர்களை வழிபடும் முறைக்கு பிதுர் தர்ப்பணம் அல்லது சிரார்த்தம் என்று பெயர்.
87. இறை விருப்பப்படி மானிடருக்கு ஆசி கூறி இல்லறத்தை நல்லறமாக்கி நல்வாழ்வுக்கு வழிகாட்டும் அதிகாரம் படைத்தவர்கள் தேவர்களும், பித்ருக்களுமே! அமாவாசை தினம் பித்ரு் கடன் செய்வதால் மூதாதையர், ரிஷிகள், தேவர்களின் ஆசி கிடைக்கின்றது என்பது ஐதீகம்.
88. நமது முன்னோர்களில் ஒருவர் இறந்த திதி, பட்சம், தமிழ்மாதம் அறிந்து, ஒவ்வொரு தமிழ்வருடமும் அதே திதியன்று(ஆங்கிலத் தேதிக்கு ஒவ்வொரு ஆண்டும் மாறிவரும்) குடும்பத்தார்கள் பிண்டம் செய்து வைத்து படைப்பதே சிரார்த்தமாகும். இதனால் குடும்பத்தில் சகல தோஷங்களும் நிவர்த்தியாகின்றன. இந்த தர்ப்பணத்தை இதேபோல அமாவாசைத் திதிகளிலும்செய்து வந்தால் மிகப்பெரும் நன்மைகள் உண்டாகும்.
89. இந்தப் புனிதமான தர்ப்பணங்களை செய்யாமல் இருந்தால், குழந்தையின்மை, கருக்கலைவு, குடும்பத் தகராறு, ஆரோக்கியக் குறைபாடு, அகால மரணம், திருமணத் தடை, தீய பழக்கங்கள், ஊனமுற்ற குழந்தைப் பிறப்பு, மூளை வளர்ச்சிக் குறைவுள்ள குழந்தைப் பிறப்பு போன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குடும்பத்தில் நடைபெற்று, நம் நிம்மதியைக் குலைத்துவிடும் என்கிறது சாஸ்திரம். இவை பித்ரு தோஷம், மாத்ரு தோஷம், நாதி தோஷம், பந்து தோஷம், புத்ர தோஷங்களாகத் திகழ்கின்றன. இவை முறையற்ற வாழ்க்கை, தேவையற்ற கோபம், மன உளைச்சல், மன அழுத்தம், தற்கொலைச் சிந்தனை, உடல்வலி போன்றவற்றை உருவாக்கி, நிம்மதியற்ற வாழ்க்கையைத் தந்துவிடும்.
90. ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் நிற்கும் ராகு கேதுக்கள் இந்த கலிகாலத்தில் பிதுர்தோஷத்துடன் பிறக்க வைக்கின்றன. இந்த பிதுர்தோஷம், நாம் முற்பிறவியில் செய்த பாவங்களின் விளைவுகளை அனுபவிப்பதற்காகவே குறிப்பிட்ட இடங்களில் நிற்கும்போது நம்மைப் பிறக்க வைக்கின்றன. பிறந்த ஜாதகத்தில், லக்னத்துக்கு 1, 5, 7, 9 முதலான இடங்களில் இராகு அல்லது கேது இருந்தால் நீங்கள் பிதுர்தோஷத்துடன் பிறந்துள்ளதாக அர்த்தம். சூரியன் மற்றும் சந்தினுக்கு கிரணதோஷத்தை தரும் ராகு மற்றும் கேது சூரியனோடும் சந்திரனோடும் இணைந்து நிற்பது மற்றும் சூரியனும் சந்திரனும் ராகு/கேது சாரத்தில் நிற்பது போன்றவை பித்ரு தோஷத்தை உறுதி செய்கின்றது.
91. ஜாதகத்தில் பித்ரு தோஷம் இருப்பவர்கள் இராமேஸ்வரம், திருப்புல்லானி மற்றும் கயா அக்ஷயவடம் போன்ற இடங்களில் தில ஹோமம் செய்வது மற்றும் பிண்ட ஸ்ரார்தம் செய்வது பித்ரு தோஷத்தை போக்கும் என்கிறது சாஸ்திரம். வைகை ஆற்றங்கரையில் அமைந்துள்ள புஷ்பவனேஸ்வரர் - சவுந்தரநாயகியம்மன் கோயில் மிகவும் சிறப்பு வாய்ந்த சிவத்தலமாகும். பாண்டிய நாட்டின் பாடல் பெற்ற 14 தலங்களில் திருப்புவனமும் ஒன்று. அக்காலத்தில் புகழ்பெற்ற சுச்சோதி மன்னன் முன்னோர்களுக்கு திதி கொடுக்க திருப்புவனம் வந்து வைகையாற்றங்கரையில் வேண்டுதல் செய்துள்ளார். திருப்புவனத்தில் அஸ்தியைக் கரைத்தால் பாவ விமோச்சனம் கிடைக்கும் என்கிறார்கள். காசியை காட்டிலும் வீசம் பங்கு அதிகம். (பதினாறு பங்கு ). இராமேஸ்வரத்தைக் காட்டிலும் ஆறு பங்கு அதிகம். மதுரையைக் காட்டிலும் முக்கால் பங்கு அதிகம்.
92. திலதைப்பதி எனப்படும் திலதர்ப்பணபுரி திலதர்ப்பணபுரி:- திலம் என்றால் எள். புரி என்றால் ஸ்தலம். எள் தர்ப்பணம் செய்ய சிறந்த ஸ்தலம் என்பது பொருள். இந்தியாவில் பித்ரு ஸ்தலங்கள் 7 உள்ளன. அவை, காசி, ராமேஸ்வரம், கயா, திரிவேணி சங்கமம், ஸ்ரீவாஞ்சியம், திருவெண்காடு, ஏழாவதாக திலதர்ப்பணபுரி. பித்ரு ஸ்தலங்களில் ஒன்றாக இந்த திலதர்ப்பணபுரி விளங்குகிறது. இராமேஸ்வரத்தில் செய்யப்படும் பித்ருக்கள் சம்பந்தமான அனைத்து பூஜைகளும் திலதர்ப்பணபுரியிலும் செய்யப் படுகின்றன. இந்த திலதர்ப்பணபுரி திருக்கோயில் மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள பூந்தோட்டம் என்ற ஊருக்கு அருகில் உள்ளது. பூந்தோட்டத்தில் இருந்து எரவாஞ்சேரி செல்லும் சாலையில் சுமார் 2 கிமீ தொலைவில் உள்ளது.
93. பித்ரு தோஷம் நீங்க ஒருமுறை சென்று பரிகாரம் செய்தால் மட்டும் நீங்காது. தொடர்ச்சியாக அமாவாசை, இறந்த திதி, மகாளயம் மற்றும் பித்ரு தினமான மக நக்ஷத்திரம் போன்ற தினங்களில் தர்பணம், ஸ்ரார்தம் செய்து "தேவதாப்ய: பித்ருப்ய: ச மஹா யோகிப்ய ஏவச நம: ஸ்வதாயை ஸ்வாஹாயை நித்யமேவ நமோ நம:" எனக்கூறி வழிபடவேண்டும். அவ்வாறு செய்தால்தான் பித்ரு தோஷம் முழுமையாக நீங்கும்.
94. தற்காலத்தில் அனைவரும் சிரார்த்தத்துக்கும், தர்ப்பணத்துக்கும் வித்தியாசம் தெரியாது இவை இரண்டுமே ஒன்று என்ற எண்ணத்தில் இருக்கின்றனர். சிரார்த்தம், தர்ப்பணம் ஆகிய இரண்டு பூஜைகளுமே இறந்த நம் முன்னோர்களின் திதியன்று செய்யப்படுபவை என்றாலும் இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு. சிரார்த்தம், திவசம் என்றால் இறந்தோருக்குப் பிரியமான உணவு, உடைகளைப் படைத்து வணங்கிப் பின்னர் அதனை ஏழைகளுக்கு தானமாக வழங்குதல் ஆகும். ஆனால் தர்ப்பணம் என்பது எள்ளும், நீரும் கொண்டு முறையான தர்ப்பண மந்திரங்களைச் சொல்லி வார்த்து பித்ருக்களை திருப்தி செய்தல் என்று பொருள்.
95. தினமும் முன்னோர்களை வழிபடும் வழக்கத்தைப் “பஞ்ச யக்ஞம்” (ஐந்து வேள்வி என்று பொருள்) என்ற தினசரிக் கடமைகளில் காண்கிறோம். அது என்ன ஐவேள்வி?
96. ஐவேள்வி? இதற்க்கு திருவள்ளுவர் பதில் சொல்கிறார்:
தென்புலத்தார், தெய்வம், விருந்து, ஒக்கல், தான் என்றாங்கு
ஐம்புலத்தாறு ஓம்பல் தலை — (குறள் 43)
தென்புலத்தார்= தெற்கு திசையில் வசிக்கும் முன்னோர்கள்
தெய்வம்= கடவுள் என்பதன் சம்ஸ்கிருதச் சொல்
விருந்து = வீட்டிற்கு வரும் விருந்தாளிகள் (சாது, சந்யாசிகள்)
ஒக்கல் = சுற்றத்தார்,
தான் = தான் (அதாவது தனது சொந்தக் குடும்பம், அவர் வளர்க்கும் ஆடு, மாடு, மரத்தில் வசிக்கும் காக்கை, குருவி, வீட்டில் ஓடும் எறும்பு முதலியன. இதை பூத யக்ஞம் என்பர்= உயிரின வேள்வி)
என்று = என்ற
ஐம்புலத்து = ஐந்து இடங்களில் செய்ய வேண்டிய (பஞ்ச வேள்வி)
ஆறு= வழியினை
ஓம்பல் = பாதுகாத்தல்
தலை= சிறந்த அறம் ஆகும் (தர்மம்)
மனு ஸ்மிருதியில் 3-72 ஸ்லோகத்தில் கூறியதற்கும் இதற்கும் சிறிதும் வேறு பாடு இல்லை — மேலும் குறள் 41-ல், இல் வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும் நல்லாற்றின் நின்ற துணை (41).... என்பது மனு ஸ்மிருதியின் 3-78 ன் மொழியாக்கம் என்பதையும் இரண்டையும் கற்ற சான்றோர் உணர்வர்.
அதாவது கிருஹஸ்தன் (குடும்ப வாழ்க்கையில் ஈடுபடுபவர்) என்பவன் வானப் ப்ரஸ்தம், சன்யாசம், பிரம்மசர்யம் என்ற மற்ற மூன்று நிலையில் உள்ளவர்க்கும் உதவுவதால் அதுதான் சிறந்த அறம் — கல்யாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டு மற்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் ஆதரிப்பவர்கள் போற்றுதலுக் குரியவர்கள்.
97.ஒரு குடும்பத்தில் ஆன் பிள்ளைகள் (அல்லது) பிள்ளைகளே இல்லாவிட்டால் நரகமா?
பிள்ளைகள் எள்ளும் நீரும் இரைத்து தர்ப்பணம், திதி முதலியவற்றைச் செய்தால் மறுமை இன்பம் கிடைக்கும் என்றால், பிள்ளைகள் பெற்றுக் கொள்ளாதோருக்கும், பிள்ளைகளே பிறவாதோருக்கும், இது பற்றி அறியாத ஜாதியினருக்கும் நரகம் வாய்க்குமா?
இல்லை.... இல்லவே இல்லை.... ஏனெனில் அவர்களுக்கும் சேர்த்து பிராமணர்கள் (கர்த்தாக்களாக) எள்ளும் நீரும் தெளித்து விடுகின்றனர். அப்படிப்பட்ட வேதம் படித்த கோவில் அர்ச்சகர்கள் /ஐயர்கள் சொல்லும் தர்ப்பண மந்திரங்களை அறிந்தோருக்கு இது தெள்ளத்தெளிவாக விளங்கும் —( ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் வெளியீடுகளில் அண்ணா அவர்கள் எழுதிய தமிழ் மொழியாக்காத்தையும் உரையையும் அனைவரும் பயிலுதல் நன்று ). இதனால்தான் வேதம் பயின்ற பிராமணர்களுக்குப் பொன்னும் பொருளையும் பண்டையகால தமிழ் மன்னர்கள் வாரி வழங்கியதை சங்க இலக்கியத்திலும், பண்டைய 80,000 கல்வெட்டுகளிலும் காண்கிறோம்.
98. தர்ப்பண மந்திரத்தில், பொதுவாக ஒரு மந்திரத்தை, தர்ப்பணம் செய்யும் அனைவருமே கூறுகிறார்கள் அது என்ன என்று தெரியுமா? தமிழாக்கம் "எவர்களுக்குத் தாயோ தந்தையோ, சிநேகிதரோ, தாயாதிகளோ, பந்துக்களோ இல்லையோ — (தர்ப்பணம் செய்ய ) — அவர்கள் எல்லாம், இதோ இந்த தர்ப்பை நுனியால் விடும் தீர்த்தத்தால் திருப்தி அடையட்டும். திருப்யத... திருப்யத... திருப்யத... என்று கூறி தர்ப்பணத்தை முடிப்பார்கள்.
99.ஆன் வாரிசு இல்லாத பெண் பிள்ளைகளை மட்டுமே பெற்றெடுத்தவர்களுக்கும், அவர்களது மருமகனும் மகனாக தர்ப்பண, திதி, அந்திமக்கிரியை காரியங்கள் செய்யலாம் என்று வேதங்கள் கூறுகிறது.
100. அந்தக் காலத்தில் தீ மூட்டி(ஹோம குண்டங்கள்) வேள்வி செய்து சிரார்த்தமாக நடந்தவை பின்னர் காலத்தின் கோலத்தினால் நீர்க்கடனாக மாறியது. அதில் ஆண்டுக்கு குறைந்தது 96 முறை இதைச் செய்ய வேண்டும் என்று சான்றோர் எழுதிய சாத்திரங்கள் கூறும்: அதாவது
12 மாதப் பிறப்பு தர்ப்பணங்கள்
12 அமாவாசை தர்ப்பணங்கள்
12 அஷ்டக தினங்கள் (மார்கழி, தை,மாசி,பங்குனி ஆகிய 4 மாதங்களின் சப்தமி,அஷ்டமி, நவமி தினங்கள்)
16 மஹாளய பட்ச தினங்கள் (சூரியன் கன்யா ராசியில் பிரவேசிக்கும் போது புரட்டாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தில் செய்யப்படும்)
4 யுக நாட்கள் (கிருத, த்ரேதா, த்வாபர, கலி யுகம் தொடங்கிய யுகாதி நாட்கள்)
14 மன்வந்தர நாட்கள் (14 மனுக்களின் ஆட்சி துவங்கிய நாட்கள்)
26 வ்யதீபாத—வைக்ருதி—விஷ்கம்ப தர்ப்பணங்கள் (27 வகை யோகங்களில் வ்யதீபாத யோகம் வரும் 13 + வைக்ருதி—விஷ்கம்ப யோகம் வரும் 13 தர்ப்பணங்கள்)
இது தவிர கிரகண காலங்களிலும் இறந்தோர் திதி வரும் நாட்களிலும் செய்வர்.
101. இந்த வருடம் (2017) மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஸ்ரீகாயத்ரி ஹோமம் - மகாளய அம்மாவாசை தர்ப்பணம் - கோ பூஜை என மிகப் புண்ணிய நாளான மஹாளய பக்ஷ அமாவாசை அன்று ஒரே இடத்தில் ஹோமம் - தர்ப்பணம் - பூஜை என நடப்பது மிகவும் அபரிவிதமான புண்ணியம் தரும் அரிதான ஒரு நிகழ்ச்சி.
அப்படிப்பட்ட புண்ணிய நிகழ்ச்சியில் கலந்துகொள்ளமுடியாவிட்டாலும், அந்த புண்ணிய காரியத்தில் உங்களது பங்கையும் (பொருளாகவோ, பணமாகவோ, சேவையாகவோ) சேர்க்கமுடியும்.
நடைபெறும் இடம்: திருமுல்லைவாயில் -
பொத்தூர் கிராமம் - கன்னடபாளையம்
நாள்: 20 செப்டம்பர் 2017
கிழமை: புதன்கிழமை
நேரம்: காலை 5 மணி முதல்
மேலும் விபரங்களுக்கு:
ஸ்ரீவித்யா காயத்ரி அறக்கட்டளை
அம்பத்தூர் - சென்னை
Email: shrividhyagayathri@gmail.com
Web: www.shrividhyagayathri.com
Phone: 89390 41417 / 89390 43436 / 97100 86818
மறந்துவிடாதீர்கள்... புரட்டாசி மாதம் முழுவதும் எதிலும் எப்போதும் துளசீதளத்தை (துளசி இலைகளை) சேர்த்துக்கொள்வது மிக மிக புண்ணிய செயலாகும்.
தமிழ் புரட்டாதி மாதத்தில் அனைத்துநாளும் பகவான் ஸ்ரீ நாராயணனுக்கு உகந்த சிறப்புமிக்க நன்னாளாகும் .. தங்களனைவரது வேண்டுதல்கள் யாவும் வேண்டியவாறே நிறைவேறிடவும் .. கல்விச்செல்வம் .. கேள்விச்செல்வம் மற்றும் பொருட்செல்வம் அனைத்தும் பெருகிடவும் பகவானைப் பிரார்த்திக்கின்றேன் ..
ஓம் நாராயணாய வித்மஹே !
வாசுதேவாய தீமஹி !
தந்நோ விஷ்ணு ப்ரசோதயாத் !!
நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.
No comments:
Post a Comment