FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, September 5, 2017

"சாம்பார்" என்ற பெயர் கொண்ட இரயில்..சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்கள் படித்த பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட பள்ளி...

"சாம்பார்" என்ற பெயர் கொண்ட இரயில்:- பெயர் வந்த காரணம் என்ன என்று தெரியுமா? 

சாம்பார் என்று சொன்னாலே அந்த பழம்பெரும் பிரபல நடிகரின் பெயர் ஞாபகம் வரும். ஆனால் அந்தக்காலத்தில்(1975) மதராஸ் என்கிற சென்னையில் "சாம்பார்" என்ற பெயரில் ஒரு இரயில் வண்டி ஓடிக்கொண்டிருந்தது, அப்படி அந்த   வண்டிக்கு பெயர் வந்த காரணம் என்ன என்று தெரியுமா? 


1975இல் சென்னையிலிருந்து காஞ்சிபுரத்திற்கு "சாம்பார்" என்று பொதுமக்களால் அழைக்கப்பட்ட, தினமும் காலை மாலை என இரண்டு வேலைகளிலும் ஒரு இரயில் வண்டி கிட்டத்தட்ட 15வருடங்களுக்கு மேல் ஓடியது. 

ஆரம்பத்தில் இது புகைவண்டியாகவும், பின்னாளில் காஞ்சிபுரத்திலிருந்து செங்கல்பட்டுவரை புகைவண்டியாகவும் பின்னர் மின்சார வண்டியாகவும் 1985க்கு பிறகு முழுவதும் மின்சார இரயில் வண்டியாகவும் இயங்கியது.

சென்னையில் பணிபுரியும் காஞ்சீபுரத்தைசேர்ந்தவர்களுக்கு இந்த இரயில்வண்டி ஒரு வரப்பிரசாதமாகவே இருந்தது. அதுமட்டுமில்லாது இந்தியாவிலேயே ஓட்டல்கள் அதிகம் நிறைந்த ஊராகவும் காஞ்சிபுரம் விளங்கியது. இந்தியாவிலேயே ஏரிகள் நிறைந்த மாவட்டமாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைமை இடமாக காஞ்சிபுரம் இருந்தது. அதற்க்கு முக்கிய காரணமாக காஞ்சிபுரத்தை பொறுத்தவரை கோவில் நகரம் பக்தர்களும், வெளிநாட்டு ஆன்மீக யாத்திரிகளும் அனுதினமும் வந்துசெல்லும் இடமாகவும் , அதோடு கைத்தறி இல்லாத அதன் சப்தம் கேட்க்காத வீடே இல்லை என்கிற காரணத்தினாலும் ("காஞ்சிக்கு சென்றால் காலாட்டி பிழைக்கலாம்" என்ற பழமொழியை உருவாக்கிய நகரம் ) , பலரது வீடுகளில் சமைத்து சாப்பிடுவதற்கு நேரமில்லாமல், குடும்பம் குடும்பமாக, குடும்ப ஓட்டல்களில் உணவுகளை வாங்கி உண்பது வெகுகாலமாக இருந்துவந்த பழக்கம். 

அப்போதெல்லாம் தமிழகத்திலேயே குடும்ப உணவகம் "ஹோட்டல்" நிறைந்த நகரமாக காஞ்சிபுரம் விளங்கியது, காஞ்சிபுரத்தை அடுத்து மதுரையிலும் இந்தப் பழக்கம் இருந்தது. "காமாட்சி, மீனாட்சி, விசாலாட்சி -என முப்பெரும் தேவியர்களின் நகரமல்லாவா? சதா உழைப்பவர்களுக்கு உணவு சமைத்திட நேரம் எங்கே இருக்கிறது, ஆகவே அந்தந்த பகுதிக்கு ஒன்று என்ற விதத்தில் பல உணவு விடுதிகள் தோன்றி காஞ்சிபுரம் நகரம் முழுவதிலும் வியாபித்திருந்தது. முக்கியமாக சாப்பாட்டு நேரம் மட்டுமே இந்த ஓட்டல்கள் திறந்திருக்கும். வெளியூரிலிருந்து வரும் யாத்திரியர்களும் வியாபாரிகளும் இந்த குடும்ப ஓட்டல்களில் முன்பதிவு செய்தால் மட்டுமே உணவு கிடைக்கும். 

அவ்வளவு ஏன் ஒருமுறை காஞ்சிபுரத்தில் தேசிய அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சி நடந்தது பல மாநிலங்களிலிருந்தும் பள்ளி மாணவர்கள் வந்திருந்தார்கள், நான் அப்போது திருத்தணி, டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசு மேல்நிலைப்பள்ளியில் (முன்னாள் இந்திய ஜனாதிபதி, விருதுபெற்ற தத்துவ ஆசிரியர், சர்வப்பள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன்  அவர்கள் படித்த பள்ளி அது, பிரிட்டீஷ் ஆட்சிக்காலத்தில் சுண்ணாப்பு கலவையால் கட்டப்பட்ட பழமையான பள்ளிக்கட்டிடங்கள் வகுப்பறைகளாகக் கொண்ட அந்த பள்ளியின் சுவர்கள் மாணவர்களாகிய எங்களோடு பேசும்-(சுவர் எப்படி பேசும்? ......அது ஒரு பெரிய கதை என்னோடு படித்த நண்பர்கள் அதுகுறித்து இன்றளவும் பேசுவார்கள், அது ஒரு இனிமையான மாணவர்களாக இருந்த காலம்... பிறகு ஒரு நேரத்தில் அதுபற்றி கூறுகிறேன்) 


நான் படித்த அதே பள்ளியில் ஆசிரியராகவும் பணியாற்றினேன். நான் ஒரு பகுதிநேர தொழிற்கல்வி ஆசிரியராக இருந்ததால் (நான் படித்த அதே பள்ளியில் ஆசிரியராக, மூன்றுவருடம் பணியாற்றினேன்) எங்கள் பள்ளியின் மாணவர்களோடு நானும் அந்த தேசிய  அறிவியல் கண்காட்சிக்கு சென்றிருந்தேன். முதல்நாள் எனக்கு நல்ல பசி மதியம் சரியாக 12.30 மணி இருக்கும்,  இன்று முழு சாப்பாட்டை ஒரு கட்டு கட்டிவிடலாம் என்று பள்ளிக்கு அருகேயிருந்த அந்த உணவு விடுதி (ஹோட்டல்) சென்று பார்த்தபோது, ஹோட்டல் முழுவதும் நிரம்பி வழிந்தது. பலர் வாசல்பகுதியில் சாப்பிட காத்திருந்தார்கள், ஹோட்டலின் கல்லாபெட்டியில் இருந்தவர் பெரிய அளவில் நெற்றி திருநீறு பட்டையில் மிகவும் தெய்வாம்சமாக திகழ்ந்தார். எங்களைப்பார்த்த அவர் "நீங்கள் சாப்பாட்டிற்கு முன்பதிவு செய்துவிட்டு மதியம் 3.00மணிக்கு வாருங்கள் என்று கூறிவிட்டார்".  

எனக்கோ மிகவும் ஆச்சரியம், பசி மயக்கம்வேறு அதெல்லாம் முடியாது அடுத்த ஓட்டலை பார்க்கலாம் என்று அங்கிருந்து கிளம்பி கிட்டத்தட்ட ஒரு 10 ஓட்டலாவது சுற்றியிருப்போம் எல்லா இடங்களிலும் சாப்பிட இடம் இல்லை அனைத்து இடங்களிலும் "சாப்பிட முன்பதிவு செய்யவேண்டும்" என்ற ஒரே பாட்டைத்தான் பாடினார்கள் வேறு வழியில்லாமல் இறுதியாக வந்த அந்த ஓட்டலில் முன்பதிவு செய்துவிட்டு, நாக்கை தொங்கபோட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும் நாய்கள்தான் அப்போது எனக்கு ஞாபகத்தில் வந்தது.... எப்போது சாப்பாடு கிடைக்கும் என்று கிட்டத்தட்ட 2மணிநேரம் "ஸ்வாமி பிரசாதத்தை தேவுடு-காப்பது" போல காத்துக்கிடந்தோம்.  அது ஒரு மறக்கமுடியாத அனுபவம்....ஹோட்டல் ஹோட்டலாக தேடியதால் நாங்கள் வெகுதூரம் வந்துவிட்டோம் என்பது, சாப்பிட்டுவிட்டு அறிவியல் கண்காட்சி நடக்கும் பள்ளிக்குத் திரும்பியபோதுதான் தெரிந்தது, நாங்கள் சாப்பிட்ட சாப்பாடு ஜீரணமாகி இன்னும் ஏதாவது சாப்பிடலாமா? என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டோம். 

காஞ்சிபுரம் "இட்டிலி" பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். காஞ்சிபுரம் இட்டிலி மிகவும் சுவையான இட்டிலி. அப்படிப்பட்ட காஞ்சிபுரம் இட்டிலியில் நெய்யில் வறுத்த மிளகு,சீரகம், முந்திரி, மஞ்சல் போடி  என சிலபொருட்களை சேர்த்து செய்யும் மிகப்பெரிய அளவு இட்டிலி என்றால் அது காஞ்சிபுரம் இட்டிலி மட்டுமே. காரணம் அந்தக்காலத்து காஞ்சிபுரம் இட்டிலி என்பது ஒரு பெரிய தட்டு அளவில் இருக்கும் "மெகா சைஸ்" இட்டிலியாகும்....(பின்னாளில் டம்ளர் சைஸ் இட்டிலி, பெரிய கப் சைஸ் இட்டிலி, பெரிய தட்டுவடிவ இட்டிலி என பல வடிவங்களில்  அதாவது ஒரு பெரிய தட்டில், டம்ளரில் இட்டிலி மாவை ஊற்றி வேகவைத்து எடுத்துவிடுவார்கள், அது அந்த பெரிய தட்டின் அளவில் அல்லது அந்த பாத்திரத்தின் அளவில் ஒரே இட்டிலி அதுவும் மிகப் பெரிய இட்டிலியாக இருக்கும். (நான் நினைக்கிறேன்:- சிறு சிறு இட்டிலிகளாக செய்ய வெகு நேரம் ஆகும் என்பதால் ஒரே ஒரு மெகா சைஸ் இட்டிலியை செய்து வீட்டில் இருக்கும் அனைவரும் பகிர்ந்துகொள்ளலாம் என்கிற எண்ணத்தில் உருவானதோ என்னவோ!!) ஆகவே காஞ்சிபுரம் இட்டிலிக்கு இன்றளவும் ஒரு தனி இடம் உண்டு எனலாம்.


சரி சரி முக்கியமான விசயத்திற்கு வராமல் வேறு எங்கோ சென்றுவிட்டோம். ஆகவே காஞ்சிபுரத்தில் வசிப்பவர்கள் விடியற்காலையே சென்னையிலிருக்கும் தமது அலுவலகத்திற்கு செல்லவேண்டியிருப்பதாலும்,  பொதுவாகவே காஞ்சிபுர வாசிகள் குடும்ப உணவு விடுதிகளில் உண்டு பழக்கப்பட்டதாலும், அதோடு காஞ்சிபுரத்தை சேர்ந்தவர்கள் சுத்த சைவ சாப்பாட்டுப் பிரியர்களாக இருந்ததினால், அனைத்து இரயில் நிலையங்களில் இருக்கும் சைவ உணவு விடுதிகளில் அவர்களது காலை உணவையும், மதிய உணவையும் பெற்றுக்கொள்வார்கள், ஆகவே அனைத்து முக்கிய இரயில் நிலையத்திலும் இந்த காஞ்சிபுரம் பயணிகளை கவருவதற்காகவே "சாம்பார் சாதம்" செய்து அதை இந்த இரயில் வண்டி ஒவ்வொரு இரயில் நிலையத்தை அடைந்ததும்  இரயில் நிலைய உணவு விடுதி விற்பனையாளர்கள் "சாம்பார் சாதம்" என்று கூவி கூவி விற்பார்கள். இதில் முக்கியமாக இந்த காஞ்சி-சென்னை இரயில் வரும்போதுமட்டுமே சைவ சாம்மார் சாதம் நிறைய விற்பனையானத்தினால் அந்த காஞ்சி-சென்னை ரயிலுக்கு "சாம்பார்" இரயில் என்ற பெயரே நிலைத்துவிட்டது. 


காலை வீட்டிலிருந்து அலுவலகம் செல்லும்போதோ அல்லது மாலை அலுவலகத்திலிருந்தோ வீட்டிற்கு செல்லும் பொது வேகவேகமாக இரயில் நிலையத்தை அடைந்தவர்கள் "சாம்பார்" போய்விட்டதா, சரியான நேரத்தில் வருமா? என்று கேட்பது ஒரு வாடிக்கையான செயலாக இருந்தது.     
                           
"பழையன கழிதலும் புதியன புகுதலும்" இயற்கையின் நியதி. ஆனால் பழமையில் ஊறித்திளைத்த பலருக்கு இதனை ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் ஏற்படுவதில்லை. நிகழ்காலம் தொடர்பாக அக்கறை காட்டுவதிலும் கூட கடந்த காலம் தொடர்பான சிந்தனைகளில் அவர்கள் மூழ்கியிருப்பார்கள். மாற்றங்கள் தவிர்க்க முடியாதவையென்பதைத் தெரிந்திருந்தாலும் அவற்றை ஏற்றுக்கொள்ள மறுத்துவிடுவார்கள்.

ஆனால் கடந்த காலத்தில் நாம் பெற்றுக்கொண்ட பொருட்களை நிகழ்காலத்தில் பெற்றுக்கொள்ள முடியாமலிருக்கிறோம். அதேபோன்று எதிர்காலத்தில் எத்தகைய மாற்றங்கள் ஏற்படும் என்பது பற்றி அதிகளவுக்கு எதிர்வு கூற முடியாமலேயே இருந்துவிடுகிறோம்.

காலம் பல விடயங்களை விழுங்கிவிடுகின்றதெனக் கூறுகிறார்கள். அது தவிர்க்க முடியாதது. ஆனால் ஏற்றுக்கொள்வதென்பது கவலையானதாக இருக்கும். அத்துடன் தலைமுறை இடைவெளியையும் நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். இது "விஞ்ஞான, தொழில்நுட்ப யுகம்' என்ற சிந்தனை புதிய தலைமுறையினர் மத்தியில் உறுதியாகக் காணப்படுகிறது. பழைய விடயங்களை இழந்துவிடுவது தொடர்பாக கவலைப்படுவது இந்த நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப யுகத்தில் கேலிக்கூத்தான விடயமென்பது புதிய தலைமுறையினரின் எண்ணப்பாடாகக் காணப்படுகிறது. விமானத்திற்குப் பதிலாக மீண்டும் மாட்டு வண்டியில் பயணம் செய்ய முடியுமா? 

பழைய பாரம்பரிய முறைகள் வேறு ஒரு புதிய பாரம்பரியமாக மாற்றமடைந்துவருகிறது. இப்படிப்பட்ட மாற்றங்கள் எந்த அளவிற்கு எதிர்கால சந்ததியினர்களுக்கு வளமான வாழ்க்கையை பெற்றுத்தரும் என்பது இன்னமும் முழுமைபெறாத எதிர்கால திட்டங்களாகத்தான் வலம்வந்துகொண்டிருக்கின்றன.   

அதேவேளை மனிதர்களும் "இயந்திரங்களாக' மாறிக்கொண்டிருப்பதே இங்கு உண்மையில் சிந்திக்கப்பட வேண்டிய விடயம். அதேவேளை சனத்தொகை அதிகரித்திருக்காத, விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி தற்போது போன்று மேம்பட்டிராத காலத்தில் மனிதர்களின் தேவைகள் குறைவாகவே இருந்தன.

இதனால் நமக்கு கடந்த காலத்தைப் பற்றிச் சிந்திக்காமல், நிகழ்காலத்திலேயே கவனத்தை செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகிறது. ஆகவே மீண்டும் திரும்பிச் செல்ல முடியாத கடந்த காலம் பற்றிச் "வாடாமலர்" சிந்தனை செய்யாமல் காலவெள்ளத்தின் திசையில் நாமும் செல்வதற்கு எம்மை இசைவாக்கமடையச் செய்வதே சிறந்த தெரிவாக அமைய முடியும். கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் வாழ்வதும், அதேசமயம் எதிர்காலம் பற்றிச் சிந்திப்பதும் சிறப்பானதாகத் தென்படுகிறது.


எனதருமை வாசக அன்பர்களே, தொடர்ந்து உங்களுக்கு என்னால் முடிந்த வாசிப்பு விருந்தை வழங்கிடும் வாய்ப்பை தரவேண்டும் என்று கூறி, எனது வலைப்பக்கத்திற்கு உலவிட வந்த உங்களின் பொன்னான வாய்ப்பிற்கு நன்றிகூறி மேலும் பல சுவையான விவரங்களை எனது அடுத்த பதிவில் காணலாம் என்று கூறி விடைபெறுகிறேன். 

நன்றிகளுடன் 
கோகி-ரேடியோ மார்கோனி.

No comments:

FREE JOBS EARN FROM HOME