FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Saturday, March 4, 2017

"உறுமிமேளம்" திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-02 / 108 (Episodu-02 of 108) :-

"உறுமிமேளம்" திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு பகுதி-02 / 108 (Episodu-02 of 108) :-  

திரைப்படப்பாடல்களில் வாத்திய இசைக்கருவிகளின் பங்கு:-  பகுதி-02 / 108 (Episodu-02 of 108) என்கிற எனது வானொலி நிகழ்ச்சிக்காக தொகுக்கப்பட்ட தொகுப்புகளை வரிசைப்படுத்தி வாரம் ஒரு பதிவுகளாக "சங்கீத சாம்ராஜ்யம்" (https://www.facebook.com/சங்கீதசாம்ராஜ்யம்-Music-Empire-615119045365788/) என்கிற எனது முகநூல் சுவற்றுப் பதிவில் பதிவிடுகிறேன். உங்களுக்குத் பிடித்த இசைக்கருவி மற்றும் அந்த இசைக்கருவியின் திரைப்பாடலை நீங்களும் என்னுடன் சேர்ந்து பதிவுசெய்து மகிழலாம்.  வாருங்கள் நிகழ்ச்சி பதிவின் "சங்கீத சாம்ராஜ்யம்"என்கிற முகநூல் பக்கத்திற்கு உங்களையும் அன்போடு அழைத்துச்செல்கிறேன்.   நன்றிகளுடன் கோகி-ரேடியோ மார்கோனி.   
நமது திருவிழா கோவில் விஷேசங்கள் என்றுமே நம்முடைய பாரம்பரிய நடனங்களும் வாத்தியங்களும் இல்லாமல் ஆரம்பிக்கப்படுவதும் இல்லை; பாரம்பரிய இசைக்கருவிகள் இல்லாமல் நிகழ்ச்சி களைகட்டுவதும் இல்லை. திருவிழா என்றாலே இளையோர் முதல் பெரியோர் வரை குடும்பமாகக் கலந்துக் கொண்டு தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதும் கருத்துப் பரிமாற்றத்தை நடத்துவதும்தான் வழக்கம். நம் அடையாளத்தை அடுத்த தலைமுறையினருக்கு திரையிட்டுக் காட்டி நம் வாழ்க்கைச் சக்கரத்திற்கு இந்த பாரம்பரிய பிடிமானம்தான் அச்சானி என்பதையும் உணர்த்தும் வேளையில்,  இந்த திருவிழா வைபங்கள்தான் நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்திற்கு அடித்தளமாக விளங்குகிறது.
நம்முடைய நாட்டுப்புற கலைகளில் முக்கிய வாத்தியம் இந்த "உறுமி மேளம்". விலங்குகள் உறுமுவதைப் போன்று ஒலியை எழுப்பக் கூடிய இசைக்கருவி என்பதால் உறுமி என்று பெயர் வந்திருக்கலாம். இது இருமுகங்களைக் கொண்ட தோல் இசைக்கருவி ஆகும். இக்கலையின் ஜனனம் என்னவோ தமிழகமாக இருந்தாலும் இதன் பயணம் என்பது மலேசிய இளைஞர்களின் ஈடுபாட்டில் வெகுதூரத்திற்கு நீடிக்கின்றது, காவல் தெய்வங்களை வணங்குவதில் முக்கிய இடம் வகிக்கும் இந்த உறுமிமேளம் மலேசிய வைபவங்கள் அனைத்திலும் முக்கிய பங்கு வகிக்கும் இசைக் கருவி. தமிழகத்திலும் பெரும்பாலான கோயில்களில் உறுமி மேளக் குழு இருப்பதைப் பார்க்கலாம். பெரும்பாலான அம்மன் பாடல்களில் உறுமிமேளம் பயன்படுத்தப்படுகிறது, தமிழ்த் தெய்வம் முருகப்பெருமானின் கோவில் திருவிழா, முருகன் பாடல்கள், ஐயப்ப பாடல்கள் என பல்வேரு ஆன்மீக பாரம்பரிய நிகழ்ச்சியில் உறுமிமேளம் வாசிக்கப்படுகிறது. பெரும்பாலான இளைஞர்கள் பகுதி நேரமாக இக்கலையையை நடத்தி வந்தாலும் அனைத்து திருவிழாக்களின் உயிரோட்டம் இந்த உறுமிமேளம் என்று சொன்னால் அது மிகையாகாது. 
உறுமிமேளம் மிக அதிக சப்தத்தைக் கொண்ட இசைக்கருவி என்பதால் வெளிநாடுகளில் இந்த இசையை இசைப்பதற்கு தடைவித்தித்து குறிப்பிட்ட இடங்களில், குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே இசைக்கலாம் என  சில விதிமுறைகளையும் வகுத்திருக்கிறார்கள்.  
திரையிசையில் உறுமிமேள  இசைக்கருவியின் இசையால் பல திரைப்படப்பாடல்கள் பலரது மனங்களிலும், அன்றும், இன்றும், என்றும் அழியாத இடம்பெற்று விளங்குகிறது என்றால் அது மிகையாகாது.இன்றய இந்த நிகழ்சியில் / பதிவில், திரைப்படப் பாடல்களில் உறுமிமேளத்தின் பங்கு பற்றி தெரிந்துகொள்ளலாம். 

பழைய திரைப்படப்பாடல்கள் வரிசையில்:-
உறுமிமேளம் என்று சொன்னாலே உடனே இந்த திரைப்படப்பாடல் நமது நினைவில் வந்துபோகும் .. உறுமி மேளத்தின் உறுமுகின்ற குரலாக TMS அவர்களின் குரலும்,  அந்த சிம்மக்குரலுக்கு இணையான நடிப்பில்  நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்திருப்பதும் மிகவும் அருமை. அந்தக் காலத்தில் பெரிய ஹிட் பாடலாகக் கருதப்பட்ட பாடல் இது. 
1). பாடல்:- கேட்டுக்கோடி உறுமிமேளம் 
போட்டுக்கோடி கோபதாபம் 
பார்த்துக்கோடி உன் மாமன்கிட்ட 
பட்டிக்காட்டு ராகம் பாவம்
https://youtu.be/ev5G35lzX3M
படம்:- பட்டிக்காடா பட்டணமா 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். திரு.பி. மாதவன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன், ஜெயலலிதா மற்றும் பலரும் நடித்துள்ளனர். இசை எம் எஸ் விஸ்வநாதன், பாடல் வரிகள் : கண்ணதாசன். 

அனைத்து அம்மன் பாடல்களிலும் உடுக்கை மற்றும் உறுமி மேளத்தின் பங்கு நிச்சயம் இருக்கும் என்று எளிமையாக சொல்லிவிடலாம் .. 
2) பாடல்:- அம்பிகையே ஈஸ்வரியே 
எம்மை ஆள வந்து கோயில் கொண்ட 
குங்குமக்காரி
ஒரு உடுக்கையிலே பகை விரட்டும் முத்துமாரி ..
பாடியவர்: TM சௌந்தரராஜன், கண்ணதாசன் வரிகள்.இசை எம் எஸ் விஸ்வநாதன் https://youtu.be/LPc8fMN4094

"உறுமிமேளம்,  உறுமி கேட்கும்.... மாடு தலையாட்டும் என்பார்கள்",  "பட்டணத்தில் பூம் பூம் மாடு; கிராமத்தில் பெருமாள் மாடு என்பார்கள்",. பூம்  பூம் பூம் மாட்டுக்காரர் தனது மாட்டை பலவண்ண துணிகளால் அலங்கரித்து அந்த மாட்டுக்கொம்பிற்கும் வண்ணம்பூசி, உறுமிமேளத்தின் ஓசைக்கேற்ப பூம் பூம் மாட்டை தலை ஆட்டச் செய்வார். தற்போதைய நகரத்தில் வசிக்கும் புதிய தலைமுறையினருக்கு கிராமத்து வேடிக்கைகள் எல்லாம் திரைப்படப்பாடல்களில் மட்டுமே கண்டு கேட்டு ரசிக்க முடியும்.
  

3) பாடல்:-  பூம் பூம் பூம் மாட்டுக்காரன் தெருவில் வந்தாண்டி, டும்டும்டும் மேளம் தட்டி சேதி சொன்னாண்டி, அரிசிபோட வெளியில்வந்த பொண்ண பார்த்தாண்டி அடுத்த மாசம் கண்ணாலத்துக்குத் தேதி சொன்னாண்டி...டும்டும்டும் ....டும்டும்டும். 3) படம் : அதே கண்கள்(1967) குரல் :P.சுசீலா குழுவினர், பாடல் : கண்ணதாசன், திரு.வேதாவின் இசையில் உருவாகி சக்கைப்போடு போட்டது இப்படத்தில். ஏ.சி.திருலோகச்சந்தரின் இயக்கத்தில் ஒரு மைல் கல் படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது. https://youtu.be/YEHvmgoYrOo 

இடைக்கால திரைப்படப் பாடல்களின் வரிசையில்:-
@ கிராமப்புற கலைகளில் "கரகாட்டம்" மிக முக்கிய பங்கை வகிக்கிறது அப்படிப்பட்ட கரகாட்டத்தில் "உறுமிமேளம்" மிக மிக  முக்கியப்பங்கு வகிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இதோ இந்தப்பாடலில் இளையராஜா அவர்கள் இனிவரும் புதிய தலைமுறையினரையும் வியப்பில் ஆழ்த்தும் வகையில் மிக அருமையாக கிராமியக்கலைக்கு உயிரூட்டியிருக்கிறார்.  

4) பாடல்:- மாங்குயிலே பூங்குயிலே சேதி ஒண்ணு கேளு ஒன்ன மாலையிட தேடி வரும் நாளு எந்த நாளு,  படம் : கரகாட்டக்காரன் (1990), இசை : இளையராஜா, பாடியவர் : பாலசுப்ரமணியம், வரிகள் : கங்கை அமரன். https://youtu.be/Ns9N03f_DdM

5) பாடல்: அம்மன் கோவில் கும்பம் இங்கே ஆடிவரும் நேரமடி .. திரைப்படம் :- அரண்மனைக்கிளி1993, இசை இளையராஜா, பாடல் முத்துலிங்கம், பாடியவர் சொர்ணலதா, மின்மினி https://youtu.be/-LRLXF2j1ps

6) பாடல்: மாரியம்மா மாரியம்மா
திரி சூலியம்மா நீலியம்மா
தலை மேல மணி மகுடம்
என் தாயி தந்த பூங் கரகம்
திரைப்படம்: கரகாட்டக் காரன்(1990), பாடியவர்: மலேசியா வாசுதேவன், சித்ரா, இயற்றியவர்: கங்கை அமரன், இசை: இளையராஜா. https://youtu.be/HfOSajWi6Bc

7) பாடல்:- பல்லாக்கு குதிரையில்  படம்:-பெரிய  வீட்டு பண்ணைக்காரன், பாடியவர் மலேஷியா வாசுதேவன் இசை இளையராஜா  https://youtu.be/CNkmu89TpzI

இதைப்போல  இளையராஜா அவர்களின் இசையில் மேலும் பல பாடல்களில் உறுமிமேளத்தின் இசையையும் இணைத்து மெருகேற்றியிருக்கிறார்.  

தற்கால புதிய பாடல்களின் வரிசையில்:- 
8) பாடல்:-  தூள் படத்தில் ‘மதுரை வீரன் தானே’ பாடல் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடம் சிறந்த பெயரைப்பெற்ற  நாட்டுப்புற பாடகி பரவை முனியம்மா அவர்ளின் பாடல் “ஏய் சிங்கம்போல நடந்து வாரான் செல்லப் பேராண்டி…” இந்தப்பாடலில் இசையமைப்பாளர் வித்தியாசாகர் அவர்கள்  "உறுமிமேளம்" இசையை மிகவும் இனிமையாக பாடலை கிராமிய மனம் கமழ இசையமைத்திருப்பார் https://youtu.be/2r7NdhBFzpo

9) பாடல் ஆளுமா டோலுமா,   வேதாளம் படத்தின் “ஆளுமா டோலுமா" என்ற ப்ரோமோ பாடல் அனிருத்தின அதிரடி இசையில் பாடலில் உறுமிமேள இசையும் சேர்த்து இசைக்கப்பட்டது. https://youtu.be/Rw2gP-L60N0
  
10) பாடல்:- அடி குத்துல குத்துறா என்கிற இளையராஜா இசையமைத்த தாரை தப்பட்டை பட பாடலில் உறுமிமேள இசையும் சேர்ந்து பயணிக்கிறது ...https://youtu.be/p-ld6emmmPw

மேலும் பல புதுப்பட குத்துப் பாடல்களில் "உறுமிமேள" இசையும் சேர்ந்து இசைக்கப்பட்டிருக்கிறது.  

இந்தத்தொடரின் அடுத்த பகுதியில் நாம் ரசிக்க இருப்பது "மவுத்தார்கன்- (MouthOrgon)" என்று அழைக்கும் வாய் உதடுகளின் நடுவில் வைத்து ஊதும் துளை இசைக்கருவி  பற்றிய சிறப்பு பகுதியையும்..., 

திரையிசையில் மவுத்தார்கன் வாத்தியக்கருவியின் பங்கு பற்றிய சிறப்பு நிகழிச்சிப் பதிவில் பங்குகொண்டு மகிழலாம். 

அதுவரை உங்களிடமிருந்து பிரியாவிடைபெறும் உங்கள் நண்பன் கோகி-ரேடியோ மார்கோனி.

இரண்டு கைகள் நான்கானால் இருவருக்கே தான் எதிர் காலம் பகைவர்களே ஓடுங்கள் புலிகளிரண்டு வருகின்றன...
https://youtu.be/7LyOJWJgSzI

நிலவு தூங்கும் நேரம் நினைவு தூங்கிடாது இரவு தூங்கினாலும் உறவு தூங்கிடாது இது ஒரு தொடர்கதை தினம் தினம் வளர்பிறை 
https://youtu.be/qjnorxdJ2J8
....மீண்டும் அடுத்த நிகழ்ச்சிப் பதிவில் சந்திப்போமா? நன்றி வணக்கம்.... கோகி-ரேடியோ மார்கோனி.

No comments:

FREE JOBS EARN FROM HOME