சொந்தமாக "சிக்கு புக்கு -இரயில் வண்டி* வைத்திருந்த தமிழரைப் பற்றி தெரியுமா? சென்னையில் ஒரு ரயில் நிலையம், சேத்துப்பட்டு என்ற பெயரில் உள்ளதே; அதை தெரியுமா?
தனி மனிதர் ஒருவர் சொந்தமாக கார், பேருந்து, விமானம் ஏன் கப்பல் கூட வைத்திருப்பார்கள், ஆனால் சொந்தமாக ரயில் வைத்திருக்கிறார்களா? ஆம், தமிழர் ஒருவர் வைத்திருந்திருக்கிறார்.
அவர் தான் சென்னையைச் சேர்ந்த தாட்டிகொண்ட "நம்பெருமாள் செட்டியார்" (Thaticonda Namberumal Chetty 1856--1925). தற்போது சென்னையில் உள்ள சேத்துப்பட்டு பகுதியின் வரலாற்றுக்கு சொந்தக்காரரான இந்த நம்பெருமாள் செட்டியார், சென்னையில் உள்ள பிரசித்தி பெற்ற பல சிவப்பு நிற கட்டிடங்களை உருவாக்கியவர். பாரிமுனையில் உள்ள உயர் நீதிமன்றம், சட்டக்கல்லூரி, எழும்பூரில் உள்ள சிற்பக் கலை கல்லூரி, மியூசியம், கன்னிமாரா நூலகம் போன்றவை இவரால் கட்டப்பட்டவை.
18 ஆம் நூற்றாண்டில் பிரபலமான பில்டிங் காண்ட்ராக்டராக இருந்த இவர் வாழ்ந்த வீடு ‘வெள்ளை மாளிகை’ என்ற பெயருடன் சேத்துப்பட்டு மேம்பாலம் அருகில், டாக்டர்.மேத்தா மருத்துவமனையின் பின்புறம் உள்ளது. 3 மாடிகள், 30 அறைகள் கொண்ட இந்த வீடு தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இதில், சீனா, ஜப்பான், இத்தாலி, இங்கிலாந்து போன்ற நாடுகளில், பீங்கானில் செய்யப்பட்ட அரிய கலைப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
Chennai எழும்பூர் பாந்தியன் சாலையிலிருந்து, ஹாரிங்டன் சாலை வரை உள்ள நிலப்பரப்பு நம்பெருமாளுக்கு சொந்தமாக இருந்தது. அதன் காரணமாகவே அப்பகுதி, ‘செட்டியார் பேட்டை’ என அழைக்கப்பட்டது. நாளடைவில், ’செட்டிபேட்டை’ என மருவி, தற்போது ‘செட்பெட்’ என மாறிவிட்டது. ஆங்கிலேயர் பலருக்கு வீடு கட்டித்தந்த நம்பெருமாளின் வீட்டில் தான், கணித மேதை ராமானுஜம் தம் இறுதி நாட்களை கழித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்திலிருந்து திரும்பிய ராமானுஜருக்கு, காசநோய் பாதிப்பு அதிகமாகிவிட்டதால், அவரது உறவினர்கள் பயந்து போய், திருவல்லிக்கேணியில் இருந்த அவர்களது வீட்டில் வைத்துக் கொள்ளவில்லை. அப்போது, நம்பெருமாள் செட்டியார் அவரை அழைத்து வந்து, தனி அறை, தனி சமையல், சிறப்பு வைத்தியம் முதலிய ஏற்பாடுகள் செய்து, அவரைக் காப்பாற்ற எல்லா முயற்சிகளையும் செய்தார். ஆனால், ராமானுஜம் முட்டை முதலியவற்றை சாப்பிட மறுத்ததால், காசநோய்க்கு இளம் வயதில் மறைந்தார். அவர், கடல் கடந்து வெளிநாடு சென்றதால், அவரது உடலைக் கூட ஏற்றுக்கொள்ள உறவினர்கள் மறுத்தனர்.
ஆதலால், நம்பெருமாள் செட்டி அவர்களே அவரது ஈமச் சடங்குகளை செய்தார். ராமானுஜத்தின் மரணச் சான்றிதழ், இன்றும் செட்டியார் வீட்டில் வைக்கப்பட்டுள்ளது.
சென்னை பல்கலைக்கழகத்தில் பி.ஏ., பட்டம் பெற்றவர் நம்பெருமாள். முன்னாள் இம்பீரியல் வங்கி ( தற்போது SBI ) நியமனம் செய்த முதல் இந்திய டைரக்டர். சென்னை மாகாணத்தின் மேல் சட்டசபைக்கு நியமிக்கப்பட்ட முதல் இந்தியர். முதன் முதலாக வெளிநாட்டு கார் ( பிரெஞ்ச் டிட்கன் ) வாங்கிய முதல் இந்தியர். தற்போது இந்த கார் விஜய் மல்லையாவிடம் உள்ளது. தன் வின்டேஜ் கலெக்ஷன் கார்களில் ஒன்றாக அதை வைத்திருக்கிறார் மல்லையா. தான் ஈட்டிய பணத்தில் பெரும் பகுதியை, சமஸ்கிருத வளர்ச்சி, வைணவ கோயில்களின் திருப்பணி, ஏழைகளின் கல்வி, மருத்துவம் போன்றவற்றிற்கு கொடுத்து உதவினார். வட சென்னையில் பல பள்ளிகளும் சேத்துப்பட்டிலுள்ள சேவா சதனம் வளாகத்தில், தாட்டிகொண்ட நாச்சாரம்மா மருத்துவமனையும் இவருடை அறக்கட்டளை சார்பில் நடைபெறுகின்றன.
சென்னையின் வளர்ச்சியில் இவரது சேவை சிறப்பானது. இந்த நம்பெருமாள் செட்டியார்தான் தன் சொந்த உபயோகத்துக்காக, நான்கு பெட்டிகள் கொண்ட தனி ரயில் வண்டி வைத்திருந்தார். தம் குடும்பத்தினரோடு திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்குச் சென்று வர இந்த ரயிலை உபயோகித்தார். மற்ற நேரங்களில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில்தான் இவருடைய ரயில் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. இவரது பெயரையே இன்று, சென்னை ‘செட்பட்’ Chennai CHETPET தாங்குகின்றது.
No comments:
Post a Comment