FREELANCER

GOOGLE-1

கோகி- ரேடியோ மார்கோனி.(கோபாலகிருஷ்ணன் - ரேடியோ மார்கோனி)

FREE JOBS

Tuesday, September 15, 2015

தமிழ் தாத்தா உ.வே.சா.அவர்கள் எழுதிய‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’....‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’:-

மகாவித்வான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களிடம் உ.வே. சாமிநாதையர் மாணவராய்த் தங்கிப் பல நூல்களைப் பாடம் கேட்டு வந்தார். அப்பொழுது சவேரிநாத பிள்ளை என்ற கிறித்தவரும் உடனிருந்து பாடம் கேட்டு வந்தார். இப்போது உ.வே.சா. எழுதிய நான் கண்டதும் கேட்டதும் நூலிலிருந்து ஒரு பகுதி :

ஒரு நாள் பிற்பகலில் பிள்ளையவர்கள் சவேரிநாத பிள்ளையை ஒரு காரியமாக மாயவரத்தில் முனிசீப்பாக இருந்த வேதநாயகம் பிள்ளையிடம் அனுப்பினார்கள். அங்குச் சென்ற சவேரிநாத பிள்ளை இரவு 12 மணியாகியும் திரும்பி வரவில்லை. பிறகு 2 மணிக்கு வந்தார். வந்தவரை “ஏன் இவ்வளவு காலதாமதம்” என்று பிள்ளை வினவினார். அதற்குப் பின்வருமாறு சவேரிநாதர் பதில் கூறினார்:

நான் இரண்டு மணிக்கு வந்ததே பெரும் பிரயாசையாகி விட்டது. முனிசீப் வீட்டிற்கு வருகையில் இரவு 9 மணியாகிவிட்டது. அவர்களோடு பேச வேண்டிய காரியத்தைப் பேசிவிட்டுத் திரும்பும் போது இரவு மணி பதினொன்று. எங்கும் மையிருட்டாய் இருந்தது.

அங்கிருந்து புறப்பட்டுச் சிறிது தூரம் வந்தேன், பெரிய மைதானத்துக்கு அருகில் வந்த போது திடீரென்று காலில் ஏதோ தட்டியது. கட்டையாக இருக்கலாமென்று எண்ணி நான் சிறிது ஒதுங்கி வர ஆரம்பித்தேன். அந்த இடத்திலும் என் காலில் ஒன்று இடித்தது. இருட்டு மிகுதியாய் இருந்ததால் எனக்குப் பயம் ஏற்பட்டது. மனத்தைத் திடப்படுத்திக் கொண்டு அந்த இடத்தை ஊன்றிக் கவனித்தேன்.

என்ன ஆச்சரியம்! அங்கே வழி நெடுக அநேக ஜனங்கள் உட்கார்ந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் சிறிதேனும் சத்தம் செய்யவில்லை. மெல்லக் குனிந்து ஒருவரைத் தடவித் தொட்டுப் பார்த்து வழிவிட வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன். அதற்குள், மற்றொருவர் எழுந்து என் காதில், ‘முட்டாளே, பேசாதே! பாரதக்கதை நடக்குது’ என்று சொல்லிவிட்டு என் கையைப் பிடித்து இழுத்துக் கீழே உட்கார வைத்துவிட்டார். நாம் நினைத்தபடி அவ்வளவு அபாயம் இல்லை என்று எனக்கு ஆறுதல் உண்டாயிற்று. பெருமூச்சு விட்டேன். எங்கே பாரதம் நடக்கிறது என்று கவனித்தேன்.

ஏதோ பாட்டுப் போன்ற ஒரு தொனி காதில் விழுந்தது. அதனொடு இடையிடையே ஆமாமா! என்ற சத்தமும், உடுக்கையொலியும் பம்பையின் முழக்கமும் ஒன்றன்பின் ஒன்றாய்க் கேட்டன. என்ன கூறப்படுகின்றன என்று காதை நிமிர்த்திக் கொண்டு கேட்டேன்.

‘பீமசேன மவராசா, மவராசா, மவராசா!’ என்றார் முதல்வர். ‘ஆமாமா!’ என்றார் பின்பாட்டுக்காரர். ‘மரத்தேப்பூ’, ‘மரத்தேப்பூ’ என்று உற்சாகத்தோடு கைகளைக் கீழும் மேலும் அசைத்துக்கொண்டு கர்ச்சனை செய்தார் பிரசங்கியார். பின்பாட்டுக்காரர் ‘ஆமாமா’ என்று மூன்று முறை முழங்கினார். அப்பால் உடுக்கையின் ஓசையும் பம்பையின் முழக்கமும் எழுந்தன. இப்படிச் சில நிமிஷம் முழங்கியபின் உடுக்கைக்காரர்,

‘டிங்கினானே, டிங்கினானே, டிங்கினானே’ என்று சொல்லி ஆலாபனம் செய்யத் தொடங்கிவிட்டார். ஜனங்கள் எல்லாரும் சந்தோஷ ஆரவாரம் செய்தனர். அவ்வளவு பெரிய கூட்டத்தில் நான் மட்டும் அந்த ஆனந்தத்தை அனுபவிக்கக் கொடுத்து வைக்கவில்லை. மேடையில் நடந்த கதை ‘பாரதம்’ என்பதை பீமசேன மவராசா என்ற சத்தத்தால் அறிந்தேன். அதற்கு மேல் நான் கேட்ட முழக்கங்களின் பொருள் எனக்கு விளங்கவில்லை.

வரும்பொழுது ஒருவரோடு ஒருவர் பேசி வருகையில் பிரசங்கியார் சொன்ன வாக்கியம் ஒரு யானையை அடிப்பதற்குப் பீமசேனன் மரத்தைப் பிடுங்கினான் என்பதென்று தெரிய வந்தது. இந்த ‘டிங்கினானே’ வரலாற்றைப் பிள்ளையவர்கள் அங்கே வருபவர்களுக்கெல்லாம் சவேரிநாத பிள்ளையைக் கொண்டு சொல்லிக் காட்டி வந்தார்கள்.

உ.வே.சா.வின் சுயசரிதம், சுவாரிசியமாக எழுதியிருக்கிறார் ... இதுபோல "எங்கோ மனம் பறக்கிறதே கூட எத்தனை முறை படித்தாலும்,  படிக்கப் படிக்க சிரிப்பும் சந்தோசமும் அதிகரிக்கும் .... நன்றிகளுடன் கோகி ...

No comments:

FREE JOBS EARN FROM HOME